இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த றோயல் செலஞ்சர்ஸ்

100

இந்தியன் பிரீமியர் லீக் 2023 (IPL) தொடரின் 20ஆவது லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லி கெபிடல்ஸ் அணியினை 23 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.

மேலும், இந்த வெற்றியுடன் 2023ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் தம்முடைய இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்ய, இது டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு தொடரில் ஐந்தாவது தொடர் தோல்வியாக மாறுகின்றது.

றோயல் செலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகள் இடையிலான இந்தப் போட்டி சனிக்கிழமை (15) பெங்களூரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் முதலில் சொந்த மைதான தரப்பினரை துடுப்பாட பணித்திருத்தார். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய றோயல் செலஞ்சர்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது.

அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி தன்னுடைய 37ஆவது IPL அரைச்சதத்தோடு 34 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில் மிச்சல் மார்ஷ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, லலித் யாதவ் மற்றும் அக்ஷார் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 175 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி கெபிடல்ஸ் அணியானது வெற்றிக்காக போராடிய போதும் 20 ஓவர்கள் நிறைவில்  9 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை எடுத்து போட்டியில் 23 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியது.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனியாளாக போராடிய மனீஷ் பாண்டே 38 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இலங்கை அணியின் தோல்விகள் குறித்து விசாரணை

இதேவேளை றோயல் செலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சில் அறிமுக வீரராக களமிறங்கிய விஜய்குமார் வைஷாக் 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் சிராஜ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியதோடு வனிந்து ஹஸரங்க மற்றும் ஹர்சால் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டோடு தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

றோயல் செலஞ்சர்ஸ் – 174/6 (20) விராட் கோலி 50(34), மிச்சல் மார்ஷ் 18/2(2), குல்தீப் யாதவ் 23/2(4)

டெல்லி கெபிடல்ஸ் – 151/9 (20) மனீஷ் பாண்டே 50(38), விஜய்குமார் வைஷாக் 20/3(4), மொஹமட் சிராஜ் 23/2(4) 

முடிவு – றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 23 ஓட்டங்களால்  வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<