தொடர் தோல்விகளுடன் தடுமாறும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

66
Lucknow Super Giants vs Sunrisers Hyderabad

2023ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் 10ஆவது லீக் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினை லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>> ரோயல் செலஞ்சர்ஸ் அணியுடன் இணையும் தென்னாபிரிக்க வேக நட்சத்திரம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஐ.பி.எல். போட்டி நேற்று (07) லக்னோவ் நகரில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்கள் எடுத்தது.

ஹைதராபாத் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ராகுல் த்ரிபாத்தி 4 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் அன்மோல்பிரீத் சிங் 31 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் குருனால் பாண்டியா 3 விக்கெட்டுக்களையும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 128 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணி, 16 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை எடுத்து போட்டியில் வெற்றியினைப் பதிவு செய்தது.

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கே.எல். ராகுல் 35 ஓட்டங்கள் பெற்றும், குருனால் பாண்டியா 23 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 34 ஓட்டங்கள் பெற்றும் வெற்றியினை உறுதி செய்தனர்.

>> ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு தொடரில் முதல் தோல்வி

மறுமுனையில் சன்ரைஸர்ஸ் அணியின் பந்துவீச்சில் ஆதில் ரஷீட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டிலும் பிரகாசித்த லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் குருனால் பாண்டியா தெரிவாகினார்.

இப்போட்டியில் தோல்வியினைத் தழுவிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் 2023ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை தழுவியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 121/8 (20) ராகுல் த்ரிபாத்தி 35(41), குருனால் பாண்டியா 18/3(4), அமித் மிஸ்ரா 23/2(4)

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் – 127/5 (16) கே.எல். ராகுல் 35(31), ஆதீல் ரஷீட் 23/2(3)

முடிவு – லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<