யாழ் வீராங்கனை எழிலேந்தினியின் கன்னிப் போட்டியில் இலங்கைக்கு வெற்றி

1978

நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் இன்று இலங்கை அபிவிருத்தி அணியை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை தேசிய அணியினர் தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர்.

தர்ஜினியின் கோல் மழையுடன் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை

சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான நான்கு..

அதேபோன்று, இன்று இடம்பெற்ற மற்றைய போட்டியில் சிங்கப்பூர் தேசிய அணி இங்கிலாந்தின் PSTAR கழக அணியினரை இலகுவாக வெற்றி கொண்டனர்.

சிங்கப்பூர் எதிர் PSTAR

இன்றைய முதல் மோதலாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் அனுபவம் கொண்ட சிங்கப்பூர் வீராங்கனைகள் PSTAR அணியினருக்கு பெரும் அழுத்தமாகவே இருந்தனர்.

போட்டி ஆரம்பித்தது முதல் ஆதிக்கம் செலுத்திய சிங்கப்பூர் தரப்பு முதல் கால் பகுதியில் மிக வேகமாக செயற்பட்டு 31 புள்ளிகளைப் பெற இங்கிலாந்து வீராங்கனைகளால் வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது.

அடுத்த கால் பகுதியிலும் சிங்கப்பூர் தரப்பினர் வேகமான ஆட்டத்தை காண்பித்த போதும் முதல் பாதியை விட குறைவான புள்ளிகளையே (25) அவர்களால் பெற முடிந்தது. எனினும் PSTAR வீராங்கனைகள் தமக்கான ஒரு புள்ளியை மாத்திரம் பெற, போட்டியின் முதல் பாதியில் சிங்கப்பூர் அணியினர் 56 – 03 என முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்து இடம்பெற்ற அடுத்த கால் பகுதியிலும் எதிரணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்த PSTAR வீராங்கனைகள் இரண்டு புள்ளிகளை மாத்திரம் பெற்ற அதேவேளை, எதிரணிக்கு 23 புள்ளிகளை விட்டுக் கொடுத்தனர். (79 – 05)

மீண்டும், இறுதி கால் பகுதியில் ஆரம்பம் போல் அதிரடி காண்பித்த சிங்கப்பூர் அணி 32 புள்ளிகளைப் பெற, எதிர் தரப்பு 3 கோல்களை மாத்திரமே பெற்றது.

போட்டி நிறைவில், நேற்றைய முதல் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வி கண்ட சிங்கப்பூர் அணியினர் 111 – 08 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வெற்றியைப் பெற்று தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.

அதேபோன்று, PSTAR அணியினருக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.  


இலங்கை தேசிய அணி எதிர் இலங்கை அபிவிருத்தி அணி

முதல் நாள் போட்டிகளில் வெற்றிகளை சுவைத்த இந்த இரு அணிகளும் இன்று தமது இரண்டாவது வெற்றியைப் பெறும் நோக்கில் இந்தப் போட்டியில் களம் கண்டன.

எனினும், இளம் வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை அபிவிருத்தி அணியை எதிர்கொள்வதனால் தேசிய அணியின் கோல் சூட்டரான சிவலிங்கம் தர்ஜினிக்கு இந்தப் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இடம்பெற்ற முதல் கால் பகுதியை தேசிய அணி வீராங்கனைகள் 17 – 04 என இலகுவாகக் கைப்பற்றினர்.

அதேபோன்று அடுத்த கால் பகுதியிலும் எதிரணிக்கு 06 புள்ளிகளை மாத்திம் விட்டுக் கொடுத்த இலங்கை தேசிய அணியினர் 21 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர். எனவே, ஆட்டத்தின் முதல் பாதி 38 – 10 என இலங்கை தேசிய அணியின் முன்னிலையுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது கால் பகுதியில் யாழ் வீராங்கனை எழிலேந்தினி களமிறக்கப்பட்டார். தனது கன்னிப் போட்டியில் தேசிய அணிக்காக விளையடிய அவர், மற்றொரு யாழ் வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கத்தின் இடமான கோல் சூட்டராக ஆடினார்.

இந்த கால் பகுதியில் இலங்கை தேசிய அணி 20 புள்ளிகளைப் பெற, இலங்கை அபிவிருத்தி அணி 6 புள்ளிகளை மாத்திரமே பெற்றது.

மீண்டும் இறுதி கால் பகுதியிலும் 16 புள்ளிகளை இலங்கை தேசிய அணி வீராங்கனைகள் பெற்றுக் கொண்ட அதேவேளை, எதிரணிக்கு 8 புள்ளிகளை மாத்திரம் விட்டுக் கொடுத்தனர்.

எனவே, இந்த ஆட்டத்தின் நிறைவில் 74 – 24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை தேசிய அணி, தொடரில் இரண்டாவது வெற்றியைப் பெற்று தரப்படுத்தலில் முதல் இடத்தைப் பெற்றது.

இந்த தொடரின் இறுதி 2 லீக் போட்டிகளும் நாளை (29) இடம்பெறவுள்ளன. நாளைய முதல் போட்டியில் இலங்கை அபிவிருத்தி அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொள்ளும்.

அதேபோன்று இறுதி லீக் ஆட்டத்தில் தற்பொழுது தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ள இலங்கை தேசிய அணி, தரப்படுத்தலில் இறுதி இடத்தில் உள்ள PSTAR அணியை எதிர்கொள்ளும்.