IPL இல் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள்

Indian Premier League 2022

154

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 15ஆவது அத்தியாயம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற அதேநேரம் சாதனைகள் முறியடிக்கப்பட்டும், புதுப்பிக்கப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில், IPL அரங்கில் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலை இந்த கட்டுரையூடாக நாம் பார்பபோம்.

கிறிஸ் கெய்ல் (36 ஓட்டங்கள்)

கடந்த 2011ஆம் ஆண்டு IPL தொடரில் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் ஒரே ஓவரில் 36 ஓட்டங்களை அதிகபட்சமாக விளாசி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இதன்மூலம் IPL வரலாற்றில் ஒரே ஓவரில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த முதல் வீரராக கிறிஸ் கெய்ல் இடம்பிடித்தார்.

IPL வரலாற்றில் ஆதிக்கத்தை காட்டும் KKR துடுப்பாட்ட வீரர்கள்!

இடதுகை சுழல்பந்து வீச்சாளர் பிரசாந்த் பரமேஸ்வரன் வீசிய அந்த ஓவரில் கிறிஸ் கெய்ல், 4 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளை விளாசினார். இதில் மேலதிக ஒரு ஓட்டமும் அடங்கும். இந்தப் போட்டியில் பெங்களூரு அணி எளிதில் வென்றது.

ரவீந்திர ஜடேஜா (37 ஓட்டங்கள்)

கடந்த 2021ஆம் ஆண்டு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 36 ஓட்டங்ளை விளாசினார். இதில் ஒரு பௌண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள், ஒரு மேலதிக ஓட்டமும் (No Ball) அடங்கும். இந்த ஓவரை ஹர்சல் பட்டேல் வீசினார். இந்தப் போட்டியில் 28 பந்துகளில் 62 ஓட்டங்களை ஜடேஜா பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, ஒரே ஓவரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய IPL சாதனையையும் ஜடேஜா படைத்தார்.

பெட் கம்மின்ஸ் (35 ஓட்டங்கள்)

இந்த ஆண்டு IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் பெட் கம்மின்ஸ் விளாசிய 35 ஓட்டங்கள், இந்த சாதனை வரிசையில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. டேனியல் சாம்ஸ் வீசிய பந்தில் 4 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளை விளாசிய பெட் கம்மின்ஸ் ஒரே ஓவரில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த 3ஆவது  வீரராக இடம்பிடித்தார்.

அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஒருவர், ஒரே ஓவரில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்தது இதுவே முதல் முறையாகும். அதுமாத்திரமின்றி, IPL வரலாற்றில் அதிவேகமாக அரைச்சதம் அடித்த வீரராக கே.எல் ராகுலுடன் பெட் கம்மின்ஸ் இணைந்துகொண்டார்.

IPL வரலாற்றில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்களாகிய வீரர்கள்!

முன்னதாக கடந்த ஆண்டு IPL தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 30 ஓட்டங்களை பெட் கம்மின்ஸ் விளாசினார். சாம் கரண் வீசிய அந்த ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியை அவர் பெற்றுக்கொண்டார். எனினும், குறித்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 221 ஓட்டங்களை கொல்கத்தா அணி துரத்தியும் தோல்வியைத் தழுவியது.

சுரேஷ் ரெய்னா (32 ஓட்டங்கள்)

கடந்த 2014ஆம் ஆண்டு IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பர்வேந்தர் ஆவானா வீசிய ஓவரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா 32 ஓட்டங்களை விளாசினார். 2ஆவது குவாலிபையர் போட்டியாக இது அமைந்ததுடன், இதில் சுரேஷ் ரெய்னா 25 பந்துகளில் 87 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்தார்.

இதே போன்று, 2010ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ் கெயில், மனோஜ் திவாரி ஜோடி 33 ஓட்டங்கள் விளாசியது. அந்த ஓவரை ரவி போபாரா வீசியிருநந்தார். எனினும் இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவியது.

இதேவேளை, IPL வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 5 முதல் 10 வரையான இடங்களில் விராத் கோஹ்லி (30 ஓட்டங்கள்), பெட் கம்மின்ஸ் (30 ஓட்டங்கள்), கிறிஸ் கெய்ல் (30 ஓட்டங்கள்), விரேந்திர சேவாக் (30 ஓட்டங்கள்), ராகுல் திவாட்டியா (30 ஓட்டங்கள்) ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<