இவ்வுலகை விட்டு பிரிந்தார் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா

220
 

ஆர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவானான டியாகோ மரடோனா மாரடைப்பால் ஆர்ஜென்டினாவில் உள்ள தனது வீட்டில் வைத்து இன்று (25) உயிரிந்தார். 

கடந்த 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்டினா அணிக்கு அணித்தலைவராக இருந்து  உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த மரடோனா, 1977 தொடக்கம் 1994 வரை 4 உலகக் கிண்ணங்கள் உட்பட ஆர்ஜென்டினா அணிக்காக 91 போட்டிகளை விளையாடியுள்ளார். 

கொரோனாவிலிருந்து மீண்டார் ரொனால்டோ

1997 இல் அனைத்து வகையான தொழில்முறை கால்பந்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்ற மரடோனா, அதன் பின் முகாமையாளராக புதிய பரிணாமம் எடுத்தார். முன்கள வீரரான மரடோனா, தான் விளையாடிய காலங்களில் 491 போட்டிகளை விளையாடி 259 கோல்களை அடித்துள்ளார். அவற்றில் 34 கோல்களை ஆர்ஜென்டினாவுக்காக அடித்துள்ளார். 

கடந்த 2008இல் ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் முகாமையாளராக பொறுப்பேற்ற மரடோனா, 2010 உலகக் கிண்ணம் வரை அவ்வணிக்கு முகாமையாளராக செயல்பட்டார்.  

தனது தொழில்முறை கால்பந்து காலத்தின் இரண்டாம் பகுதியில் போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளான அவர், 1991 இல் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 15 மாதங்கள் தடைக்குள்ளாக்கப்பட்டர்.

கால்பந்து உலகின் ஜாம்பவானாக கருதப்படும் மரடோனா, கடந்த மாதம் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவுக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை செய்து வீட்டுக்கு திரும்பிய நிலையிலேயே இன்றைய தினம் இந்த மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரின் இழப்பு அனைத்து கால்பந்து ரசிகர்களையும் பலத்த சோகத்தில் உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<