இலங்கையின் ஒரு நாள், T-20 அணித் தலைவராக திசர பெரேரா

2308

சகல துறை வீரரும் அதிரடி வீரருமான திசர பெரேரா, இந்தியாவுடன்ந டைபெறவிருக்கும் ஒரு நாள் மற்றும் T-20 தொடர்களுக்கு இலங்கை அணியின் தலைவராக புதிய பொறுப்பினை எடுத்துக் கொண்டுள்ளார்.

எமது மோசமான துடுப்பாட்டமே தோல்விக்குக் காரணம்: சந்திமால்

இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2ஆவது…

இலங்கை அணிக்கு ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளுக்கு ஏற்கனவே தலைவராக நியமிக்கப்பட்டிருந்த உபுல் தரங்க அப்பதவியிலிருந்து விலகியதனை அடுத்தே புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான பெரேரா அணியின் தலைமைப் பதவியை ஏற்றிருக்கின்றார்.  

உபுல் தரங்கவின் தலைமையின் கீழான இலங்கை அணி தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான ஒரு நாள் தொடர்களை 5-0 என வைட் வொஷ் முறையில் பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் தனது காயங்கள் காரணமாக, அணியில் இல்லாதபோது இலங்கையை வழிநடாத்திய தரங்க, ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரினை இலங்கை சொந்த மண்ணில்  வைத்து 3-2 என பறிகொடுத்த பின்னர் (மெதிவ்ஸ் பதவி விலகியதை அடுத்து) மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பினை உத்தியோகபூர்வமாக ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாம் விளையாடிய இறுதி 12 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியினை தழுவியிருக்கும் இலங்கை, ஒரு நாள் போட்டிகள் தரவரிசையிலும் தற்போது 8 ஆம் இடத்தில் காணப்படுகின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கையின் 22 ஆவது தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பெரேரா இப்படியான தனது நாட்டின்  இக்கட்டான நிலையினை  மாற்றுவார் என நம்பப்படுகின்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக உபுல் தரங்க உட்பட சில ஏனைய இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுடனான T-20 போட்டியில் விளையாட அந்நாட்டிற்கு செல்ல மறுத்தனர். அதனை அடுத்து, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியினை இரண்டாக பிரித்து பாகிஸ்தான் அணியுடனான T-20 தொடருக்கு (பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிக்கு ஒரு அணி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு ஒரு அணி) அறிவிக்க முடியாது என இலங்கை கிரிக்கெட் சபை கூறியது. இதன் அடிப்படையில் அப்போது தெரிவு செய்யப்பட்ட ஒரே இலங்கை அணியினை வழிநடாத்த பெரேரா நியமனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனது நீண்ட நாள் கனவு நனவாகியது – திசர பெரேரா

தேசிய அணிக்கு தலைவராவது தனது நீண்ட நாள் கனவு..

அனுபவம் குறைந்த இளம் வீரர்களுடன் விளையாடியதால் பாகிஸ்தானுடனான T-20 தொடரினை இலங்கை பறிகொடுத்திருந்த போதிலும், பெரேரா சிறப்பான தலைமைத்துவத்தினை அந்த T-20 தொடரில் வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கட்டாக் நகரில் நடைபெற்றிருந்த ஒரு நாள் போட்டியில் இலங்கைக்காக அறிமுகமாயிருந்த பெரேரா, அப்போட்டியில் வெறும் 14 பந்துகளினை மாத்திரம் சந்தித்து 31 ஓட்டங்களினை அதிரடியான முறையில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து இன்று வரை இலங்கை அணிக்காக 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் பெரேரா, 17.72 என்கிற துடுப்பாட்ட சராசரியினையும், 32.62 என்கிற பந்து வீச்சு சராசரியினையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.