1000ஆவது போட்டியில் விளையாடிய ரொனால்டோ: அடுத்தடுத்து 4 கோல்கள் பெற்ற மெஸ்ஸி

153

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு.   

ஜுவன்டஸ் எதிர் ஸ்பால்

தனது 1000 ஆவது தொழில்சார் கால்பந்து போட்டியில் களமிறங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ச்சியாக பதினொராவது போட்டியில் கோல் பெற்று ஸ்பால் அணிக்கு எதிரான போட்டியில் ஜுவன்டஸ் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். 

வலன்சியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அடலான்டா: டொட்டன்ஹாமுக்கு நெருக்கடி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள்…..

சீரி A புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஜுவான்டஸ் அணி கடைசி இடத்தில் இருக்கும் ஸ்பால் அணியை இந்தப் போட்டியில் 2-1 என தோற்கடித்ததன் மூலம் தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது. 

35 வயதான ரொனால்டோ கடந்த வாரம் நடந்த பிரெசியா அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவர் தனது 1000 ஆவது போட்டியில் விளையாடியுள்ளார். இதன்படி ரொனால்டோ 836 கழக போட்டிகளிலும் 164 சர்வதேச போட்டிகளிலும் இதுவரை விளையாடியுள்ளார். 

இந்நிலையில் 39 ஆவது நிமிடத்தில் ஜுவான் குவாட்ராடோ வழங்கிய பந்தை பெனால்டி பெட்டியின் மத்தியில் இருந்து கோல் புகுத்தி ரொனால்டோ மற்றொரு சாதனையை படைத்தார். 

இது அவர் சிரி A தொடரில் தொடர்ச்சியாக 11ஆவது போட்டியில் பெறும் கோலாகும். இதன் மூலம் அவர் காப்ரியல் பட்டிஸ்டா மற்றும் பெபியோ குவாக்லிரல்லா ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். 

இதில் அரோன் ரெம்சி 60ஆவது நிமிடத்தில் ஜுவான்டஸ் அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார். கோல் பெற போராடிய ஸ்பால் அணி சார்பில் 69 ஆவது நிமிடத்தில் அன்ட்ரி பெடக்னா பெனால்டி மூலம் ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார். 


ரியல் மெட்ரிட் எதிர் லெவன்டே

லா லிகாவில் 10 ஆவது இடத்தில் இருக்கும் லெவன்டேவிடம் 1-0 என தோல்வியடைந்த ரியல் மெட்ரிட் புள்ளிப்பட்டியலில் தனது முதல் இடத்தை பார்சிலோனாவிடம் பறிகொடுத்தது. இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் உபாதை காரணமாக வெளியேறியது ரியல் மெட்ரிட்டுக்கு மற்றொரு பின்னடைவாக இருந்தது.

ரியல் மெட்ரிட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில் லெவன்டே 79 ஆவது நிமிடத்தில் இரண்டாவது முறையாக இலக்கை நோக்கி உதைத்து கோல் புகுத்தியது. ஜோஸ் லுவிஸ் மொராலஸ் அந்த கோலை பெற்றார். 

இரண்டாவது பாதியில் ரியல் மெட்ரிட் சார்பில் கோல் பெறும் சிறந்த வாய்ப்பு ஒன்றை தவறவிட்ட ஹசார்ட் உபாதைக்கு உள்ளாகி வெளியேறினார். அடிக்கடி காயத்திற்கு உள்ளாகி வரும் ஹசார்ட் சம்பின்ஸ் லீக்கின் 16 அணிகள் சுற்றில் ரியல் மெட்ரிட் அணி ஆடும் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   

அதேபோன்று எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி ரியல் மெட்ரிட் தனது போட்டி அணியான பார்சிலோனாவை ‘எல் கிளாசிகோ’ ஆட்டத்தில் எதிர்கொள்ளவுள்ளது. 

லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் ரியல் மெட்ரிட் 2 புள்ளிகளால் பின்தங்கியுள்ளது. 


பார்சிலோனா எதிர் ஈபர்

லியோனல் மெஸ்ஸியின் நான்கு கோல்கள் மூலம் ஈபர் அணிக்கு எதிரான போட்டியில் 5-0 என இலகு வெற்றியீட்டிய பார்சிலோன லா லிகாவில் முதலிடத்தை உறுதி செய்துகொண்டது. 

எதிரணியை முழுமையாக துவம்சம் செய்த மெஸ்ஸி 14 ஆவது நிமிடத்தில் மூன்று பின்கள வீரர்களை முறியடித்து முதல் கோலை பெற்றதோடு 37 ஆவது நிமிடத்தில் ஆர்டுரோ விடால் பரிமாற்றிய பந்தை மின்னல் வேகத்தில் கோலாக மாற்றினார். தொடர்ந்து அவர் 40 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற பார்சிலோனா முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது. 

கடைசி நேரத்தில் செயற்பட்ட மெஸ்ஸி போட்டியில் நான்காவது கோலையும் பெற்றார். போட்டியின் முழுநேரம் முடிவதற்கு ஒரு நிமிடம் இருக்கும்போது பார்சிலோனா சார்பில் ஆர்தர் மெளோ ஐந்தாவது கோலை பெற்றார். 

பார்சிலோனா அடுத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் நபோலி அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செல்சி எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்

ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டிய செல்சி அணி ப்ரீமியர் லீக்கின் முதல் நான்கு இடத்திற்கான போட்டியில் தீர்க்கமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. 

இந்த வெற்றியுடன் செல்சி அணி டொட்டன்ஹாமை விடவும் 4 புள்ளிகள் முன்னிலையுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 

போட்டியின் முதல் பாதியிலேயே ஒலிவர் கிரௌட் (15) மற்றும் மார்கோஸ் அலொன்சோவின் (48) கோல்கள் மூலம் செல்சி அணி முன்னிலை பெற்று கடைசி வரை அதனை தக்கவைத்துக்கொண்டது. 

இதனிடையே எரிக் லமேலாவின் உதை அன்டோனியோ ரிட்ரிகஸின் குதிகாலில் பட்டு ஓன் கோலாக மாறியதன் மூலம் டொட்டன்ஹாம் 89 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றது.  

லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின்……

மன்செஸ்டர் சிட்டி எதிர் லெய்செஸ்டர் சிட்டி

காப்ரியல் ஜேசுஸின் பிந்திய நேர கோல் மூலம் லெய்செஸ்டர் சிட்டிக்கு எதிராக மன்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்தில் இருக்கும் மன்செஸ்டர் சிட்டி மூன்றாவது இடத்தில் உள்ள லெய்செஸ்டரை விடவும் 7 புள்ளிகளால் முன்னிலை பெற்றுள்ளது.  

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் செர்கியோ அகுவேராவுக்கு 62 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை அவர் தவறவிட்டார். எனினும் 80 ஆவது நிமிடத்தில் ஜேசுஸினால் வெற்றி கோலை பெற முடிந்தது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<