மன்செஸ்டர் யுனைடட்டை கடைசி நிமிடத்தில் சமன் செய்த செபீல்ட் யுனைடட்

மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான ப்ரீமியர் லீக் போட்டியை கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் செபீல்ட் யுனைடட் அணி 3-3 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்தது. 

ப்ரமல் லேனில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற போட்டியில் செபீல்ட் 3-2 என தோல்வியை நெருங்கி இருந்தபோது ஒலிவர் மக்கர்னி 90 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை புகுத்தினார். அப்போது பந்து முன்கள வீரர் கலியும் ரொன்சனின் கைகளில் பட்டது குறித்து வீடியோ நடுவரின் உதவி நாடப்பட்டு பரபரப்பான காத்திருப்புக்கு பின்னரே கோல் வழங்கப்பட்டது. 

லா லிகாவில் ரியல் மெட்ரிட், பார்சிலோன முதலிடத்தில்: லிவர்பூல் தொடர்ந்து வெற்றி

சர்வதேச போட்டி இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பமான ……….

போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய செபீல்ட் யுனைடட் 19 ஆவது நிமிடத்தில் முதல் கோலை புகுத்தியது. வலைக்கு மிக நெருங்கிய தூரத்தில் இருந்து ஜோன் பிளக் அந்த கோலை பெற்றார். 

தொடர்ந்து 52ஆவது நிமிடத்தில் பிளக் பரிமாற்றிய பந்தை கீழ் வலது மூலையில் இருந்து பெற்ற லைஸ் மௌசெட் பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து உதைத்து செபீல்ட் யுனைடட் அணிக்காக இரண்டாவது கோலை பெற்றார். 

எனினும், மன்செஸ்டர் யுனைடட் ஏழு நிமிட இடைவெளிக்குள் மூன்று கோல்களை புகுத்தி போட்டியை முழுமையாக தன் பக்கம் திசைதிருப்பியது. 

19 வயதான பிரன்டன் வில்லியம்ஸ் 72 ஆவது நிமிடத்தில் அபார கோல் ஒன்றை பெற்றதோடு பதில் வீரர் மேசன் கிரீன்வூட் 4 நிமிடங்களுக்கு பின் இரண்டாவது கோலை புகுத்திய நிலையில் 79 ஆவது நிமிடத்தில் மார்கஸ் ரஷ்போர்ட் பெற்ற மூன்றாவது கோல் மூலம் யுனைடட் முன்னிலை பெற்றது.    

எனினும் மக்கர்னி பெற்ற சமநிலை கோலை அடுத்து இரு அணிகளும் புள்ளிகளை பகிர்ந்துகொண்டன. மன்செஸ்டர் யுனைடட் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திலும் செபீல்ட் யுனைடட் 6ஆவது இடத்திலும் உள்ளன. 

செபீல்ட் யுனைடட் 2007 க்கு பின்னர் முதல் முறையாகவே ப்ரீமியர் லீக் பருவத்தில் இம்முறை ஆடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கோல் பெற்றவர்கள்

செபீல்ட் யுனைடட் – ஜோன் பிளக் 19’, லைஸ் மௌசெட் 52, ஒலிவர் மக்கர்னி 90’

மன்செஸ்டர் யுனைடட் – பிரன்டன் வில்லியம்ஸ் 72’, மேசன் கிரீன்வூட் 77’, மார்கஸ் ரஷ்போர்ட் 79’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<