லிவர்பூல் மீண்டும் வெற்றி: செல்சி, மன்செஸ்டர் யுனைடட் இலகு வெற்றி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (11) நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு,

லிவர்பூல் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்

டொட்டன்ஹாம் அணியை கடுமையாக போராடி 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக்கில் 16 புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.   

முதல் பாதியில் மொஹமட் சலாஹ் உதவ ரொபார்டோ பர்மினோ பெற்ற கோல் லிவர்பூல் அணியின் வெற்றி கோலாக இருந்ததோடு அந்த அணி கடந்த 30 ஆண்டுகளில் தனது முதல் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக்கொண்டுள்ளது

இதன்படி லிவர்பூல் அணி இந்தப் பருவத்தில் இதுவரை ஆடிய 21 போட்டிகளில் மொத்தம் 61 புள்ளிகளை பெற்றுள்ளது. ஐரோப்பாவின் ஐந்து முக்கிய லீக்குகளிலும் இந்த மைல்கல்லை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

அதேபோன்று லிவர்பூலின் 21 போட்டிகளில் அந்த அணி 20 போட்டிகளில் வென்றதும் ஐரோப்பாவின் முன்னணி ஐந்து லீக்குகளிலும் இதுவே முதல் முறையாகும்

கிரிஸ்டல் பெலஸ் எதிர் ஆர்சனல்

பீர்ரே எமரிக் அவுபமயங் கோல் பெற்று பின் சிவப்பு அட்டை பெற்ற ஆர்சனல் அணிக்கு எதிரான போட்டியை கிரிஸ்டல் பெலஸ் 1-1 என சமநிலை செய்தது

செல்ஹர்ஸ்ட் பார்க் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவுபமயங் வருகை அணியான ஆர்சனல் சார்பில் 12 ஆவது நிமிடத்தில் கோல் பெற்ற நிலையில் இரண்டாவது பாதியில் அன்ட்ரே அயேவ் பதில் கோல் திருப்பினார்

இந்நிலையில் ஆர்சனல் அணித்தலைவரான அவுபமயங் எதிரணி வீரர் மெக்மேயருக்கு இடையூறு செய்ததற்கு நடுவர் மஞ்சள் அட்டை கண்பித்த நிலையில் அது தொடர்பில் வீடியோ உதவி நடுவரை நாடிய பின் அது சிவப்பு அட்டையாக மாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டார்

இந்த முடிவை அடுத்து கிரிஸ்டல் பெலஸ் அணியை விடவும் ஆர்சனல் ஒரு புள்ளி குறைவாக பெற்று 10 ஆவது இடத்தில் நீடிக்கிறது

செல்சி எதிர் பர்ன்லி

ஸ்டான்ட்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற பர்ன்லி அணிக்கு எதிரான போட்டியில் 19 வயதுடைய கலம் ஹட்ஸன் ஒடோய் தனது முதல் ப்ரீமியர் லீக் கோலை பெற செல்சி அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது

வில்லியன் இழைத்த தவறினால் 27 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஜோர்கின்ஹோ கோலாக மாற்றியதன் மூலம் தனது கோல் எண்ணிக்கையை ஆரம்பித்த ஆர்சனல் சார்பில் டம்மி அப்ரஹாம் 38 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை பெற்றார். எதிரணி கோல் காப்பாளர் நிக் பொப் செய்த அதிர்ச்சி தரும் தவறைக் கொண்டே அப்ரஹாம் அந்த கோலை பெற்றார்.

தனது சொந்த மைதானத்தில் கடைசியாக ஆடிய இரண்டு போட்டிகளிலும் பேர்ன்மௌத் மற்றும் சவுதம்டன் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த நிலையிலேயே செல்சி இந்தப் போட்டியில் களமிறங்கியது. எனினும் அந்த அணி போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதை காண முடிந்தது.    

இரண்டாவது பாதியில் அப்ரஹாம் தள்ளிவிட்ட பந்தை கோல் கம்பத்திற்கு நெருக்கமாக பெற்ற ஹட்ஸன் ஒடோய் கோலாக மாற்றினார். இதன்படி 2002 ஆம் ஆண்டு கார்ல்டன் கோல்லுக்கு பின்னர் ஆர்சனல் அணி சார்பில் ப்ரீமியர் லீக்கில் கோல் பெற்ற இளம் வீரராக ஹட்ஸன் ஒடோய் பதிவானார்.  

இந்த வெற்றியுடன் செல்சி ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிப்பதோடு வெளியேற்ற நிலையை விடவும் வெறும் நான்கு புள்ளிகளே அதிகமாக உள்ளது.  

மன்செஸ்டர் யுனைடட் எதிர் நோர்விச் சிட்டி

மார்கஸ் ராஷ்போர்ட் பெற்ற இரட்டை கோல்களின் உதவியோடு ஓல்ட் டிரபர்டில் நடைபெற்ற நோர்விச் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றியீட்டியது.    

மன்செஸ்டர் யுனைடட் அணிக்காக தனது 200 ஆவது போட்டியில் களமிறங்கிய ரஷ்போர்ட் ஜுவான் மாடா பரிமாற்றிய பந்தை 27 ஆவது நிமிடத்தில் கோலாக மாற்றினார்.

இந்நிலையில் பிரன்டன் வில்லியம்ஸை பெனால்டி பெட்டிக்குள் நோர்விச் கோல் காப்பாளர் டிம் க்ருல் கீழே வீழ்த்த மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அதனைக் கொண்டு ராஷ்போர்ட் இரண்டாவது கோலை பெற்றார்

தொடர்ந்து இரண்டாவது பாதியில் அன்டொனி மார்சல் மற்றும் மேசன் கரீவுன்ட் மன்செஸ்டர் யுனைடட் சார்பில் மேலும் இரு கோல்களை பெற்றனர்

மன்செஸ்டர் யுனைடட், செல்சியை விடவும் ஐந்து புள்ளிகள் குறைவாக புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.    

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<