கெண்ட் கிக் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் கல்முனை சனி மௌன்ட் விளையாட்டுக் கழக அணி 4 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் சாய்ந்தமருது பிளயிங் ஹோஸ் விளையாட்டுக் கழக அணியைத் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

முதலாவது கால் இறுதிப் போட்டி இன்று (19) மாலை 4.20 மணிக்கு ஆரம்பமானது. கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழக அணியும், சாய்ந்தமருது பிளயிங் ஹோஸ் விளையாட்டுக் கழக அணியும் மோதிக் கொண்டன.

போட்டி ஆரம்பித்து 5ஆவது நிமிடத்தில் சனி மௌன்ட் அணிக்கு கோல் போடும் வாய்ப்பு  ஒன்று வந்தது. பெனால்டி எல்லைப் பகுதியில் முன்கள வீரா் நஸீர் பரிமாறிய பந்தை பெற்றுக் கொண்ட சனி மௌன்ட் அணியின் முன்னணி வீரா் ஏ.டபிள்யு.எம்.றிபாஸ் கோல் கம்பத்தை நோக்கி வேகமாக அடித்தபோது பந்து கம்பத்தின் மேலால் சென்றது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் பிளயிங் ஹோஸ் அணி வீரா் றிப்கான் சனி மௌன்ட் வீரர்கள் இருவரைத் தாண்டி பந்தினைக் கொண்டு வந்து சி.எம்.பாயிசுக்கு பந்தைப் பரிமாற்றினார். பாயிஸ் கோல் கம்பத்தை நோக்கி உதைத்தபோது பந்து கம்பத்தைத் தாண்டிச் சென்றது. நிதானமாக அவதானித்து பந்தை உதைத்திருந்தால் மிக இலகுவான கோல் ஒன்றை பிளயிங் ஹோஸ் அணி பெற்றிருக்கலாம். 

கெண்ட் கிக் கால்பந்து தொடரின் முதல் இரு சுற்றுக்களின் முடிவுகள்

அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் ஆதரவுடன் நிந்தவுர் கென்ட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு..

போட்டியின் 23ஆவது நிமிடத்தில் சனி மௌன்ட் வீரா் எம்.ஏ.ஆர். முகம்மட் பெனால்டி எல்லைக்குள் பந்தினை எடுத்து வரும்போது பந்தினைப் பிடிப்பதற்கு முன் சென்ற பிளயிங் ஹோஸ் கோல் காப்பாளர் முறையற்ற விதத்தில் செயற்பட்டதால் நடுவர் அறபாத் சனி மெளன்ட் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். முன்கள வீரா் றிபாஸ் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்து சனி மௌன்ட் அணியை 1-0 கோல் அடிப்படையில் முன்னிலைக்கு இட்டுச் சென்றார்.

சனி மௌன்ட் கழகம் கோல் அடித்து முன்னிலையில் இருந்தாலும் பிளயிங் ஹோஸ் வீரா்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். போட்டியின் 29ஆவது நிமிடத்தில் முறையற்ற வித்தில் பந்தினைப் பறிக்க முற்பட்ட பிளயிங் ஹோஸ் வீரா் சஜானுக்கு மத்தியஸ்தர் மஞ்சள் அட்டையை காண்பித்தார்.

30ஆவது நிமிடத்தில் கிடைத்த பிறிகிக் (Free Kick) வாய்ப்பை பயன்படுத்தி சனி மௌன்ட் வீரா் றிபாஸ் கம்பம் நோக்கி அடிக்க பந்தை றிஸ்னி உயர்ந்து தலையால் தட்டி கோல் பெற முயற்சித்தபோதும் பந்து கம்பத்தின் மேலால் சென்றது.

முதல் பாதி: சனி மெளன்ட் விளையாட்டுக் கழகம் 1 – 0 பிளயிங் ஹோஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமாகி ஒரு நிமிடம் கூட செல்லாத நிலையில் அதாவது போட்டியின் 46ஆவது நிமிடத்தில் சனி மௌன்ட் அணிக்குக் கிடைத்த கோணர் கிக் வாய்ப்பை றுஸ்னி வர்மன் உதைத்தபோது ஆர். முகம்மட்  உயர்ந்து தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் சனி மௌன்ட கழகம் 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது.

பிளயிங் ஹோஸ் வீரா்கள் தமது பங்கிற்கு பந்துகளை சனி மௌன்ட் கோல்கம்ப எல்லைப் பகுதிக்குள் கொண்டு வந்தபோதும் கோல் அடிப்பதில் அவ்வணி வீரா்கள் தவறியமை அவர்களுக்கு பெரும் பின்னடைவாகக் காணப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் ஆட்டத்தைக் தமது கட்டுப்பாட்டிற்குள் எடுத்த சனி மௌன்ட் வீரா்கள் பிளயிங் ஹோஸ் அணியின் கோல் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவினார்கள். போட்டியின் 73ஆவது நிமிடத்தில் றிஸ்வான் பரிமாறிய பந்தைப் பெற்றுக் கொண்ட றுஸ்னி வர்மன் இடது பக்கத்திலிருந்து பந்தை உதைத்தபோது கோல் காப்பாளரைத் தாண்டி பந்து கம்பத்திற்குள் சென்றது. இதனால் 3ஆவது கோலையும் சனி மௌன்ட் கழகம் பதிவு செய்தது.

போட்டியின் 82ஆவது நிமிடத்தில் சனி மௌனட் அணிக்குக் கிடைத்த கோணர் கிக் வாய்ப்பை சஜீத் அடித்தபோது றுஸ்னி வர்மன் தலையால் முட்டி பந்து  கோல் எல்லைக்குள் சென்று கோலாக மாறியது. இதனால் சனி மௌன்ட கழகம் 4 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்து, தனது வெற்றியையும் உறுதி செய்தது.

நான்கு கோல்கள் தமக்கு எதிராக அடிக்கப்பட்டதனால் பிளயிங் ஹோஸ் அணியின் ஆட்டத்தில் வேகம் குறைந்ததுடன் கம்பம் நோக்கி அடித்த பந்துகள் பல சந்தர்ப்பங்களில் கம்பத்திற்கு வெளியே சென்றது.

இவ்வேளை சனி மெளன்ட் கழக வீரர் அஸ்கர் முறையற்ற விதத்தில் விளையாட முற்பட்டபோது அவருக்கு நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

போட்டியின் 87ஆவது  நிமிடத்தில் பிளயிங் ஹோஸ் வீரர் றிபாத் முறையற்ற விதத்தில் பந்தினைப் பறிக்க முற்பட்டதால் அவருக்கு மஞ்சள் அட்டை மத்தியஸ்தரால் காண்பிக்கப்பட்டது.

கடைசி நேரத்தில் பிளயிங் ஹோஸ் அணிக்கு கோல் போடும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பெனால்டி எல்லைக்கு வெளியில் கிடைத்த பிறிகிக் வாய்ப்பை சீ.எம்.பாயிஸ் கம்பம் நோக்கி அடித்தபோதும் பந்து கம்பத்திற்கு சற்று மேலால் சென்றதுடன் ஒரு கோலாவது பெறும் அந்த வாய்ப்பும் இறுதியில் இல்லாமல் போனது.

போட்டியின் பிரதான மத்தியஸ்தர் எஹியா போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தபோது 4 -0 என்ற கோல்கள் அடிப்படையில் கல்முனை சனி மௌன்ட் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாகத் தெரிவானது.

முழு நேரம்: சனி மெளன்ட் விளையாட்டுக் கழகம் 4 – 0 பிளயிங் ஹோஸ் விளையாட்டுக் கழகம்

போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற சனி மௌன்ட் விளையாட்டுக் கழக அணியின் பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.மனாப் கருத்துத் தெரிவிக்கும்போது, ”இவ்வெற்றி நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் சில கோல்கள் அடிக்கும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் வீரர்கள் அதனை தவறவிட்டனர். அத்தோடு எமது அணியில் மூன்று வீரர்கள் காயத்திற்குள்ளாகியிருந்தனர். அதுவும் கூடுதலான கோல்கள் அடிக்காததற்குக் காரணமாகும். அரையிறுதிப் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடுவோம்” என்று கூறினார்.

தோல்வியடைந்த சாய்ந்தமருது பிளயிங் ஹோஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் எஸ்.முகம்மட் கனி கருத்துத் தெரிவிக்கும்போது, ”இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் எமது அணி சிறப்பாக விளையாடிபோதிலும் பின்னர் வீரா்களுக்கிடையில் சரியான பந்துப் பறிமாற்றம் இல்லாமையே தோல்வியடைய நேரிட்டுள்ளது. அத்துடன் சில வீரா்கள் காயத்திற்குள்ளாகியிருந்தமையும் எமக்கு பாரிய இழப்பாகும். அடுத்து வரும் போட்டிகளில் எமது தவறுகளை திருத்திக் கொண்டு விளையாடி வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

இப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக எஸ்.எல்.வை.அறபாத் கடமையாற்றியதுடன்  துணை நடுவர்களாக ஏ.எம்.ஜப்ரான், ஜே.பாதூசா செயற்பட்டதுடன் நான்காவது நடுவராக எஸ்.எம்.உபைதீன் செயற்பட்டார்.

நாளை (20) இடம்பெறவுள்ள இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகமும், காத்தான்குடி நெசனல் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளது.