போட்டி இரு அணிகளுக்கும் சார்பான நிலையில்

298
Pak vs Eng 1st test Day 3

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்களை  எடுத்திருந்தது. கிறிஸ் வோக்ஸ் 31 ஓட்டங்களோடும், ஸ்டுவர்ட் ப்ரோட் 11 ஓட்டங்களோடும் களத்தில் இருந்தனர்.

நேற்று  3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஸ்டுவர்ட் ப்ரோட் மேலும் 6 ஓட்டங்களை எடுத்து 17 ஓட்டங்களோடு  ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்டீபன் பின் 5 ஓட்டங்களோடும், ஜெக் போல் 4 ஓட்டங்களோடும்  ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 79.1 ஓவர்கள் முடிவில் 272 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. வோக்ஸ் 35 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் யாசீர் ஷா 6 விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக குக் 81 ஓட்டங்களையும், ஜோ ரூட் 48 ஓட்டங்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி 3ஆவது நாளில் 8.1 ஓவர்களை சந்தித்து 19 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 3 விக்கட்டுகளை இழந்தது.

30 வயதாகும் யாசீர் ஷாவிற்கு இது 13ஆவது டெஸ்ட் ஆகும். இதற்குள் அவர் 81 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். லோர்ட்ஸ் டெஸ்டில் இன்னும் ஒரு இனிங்ஸ் மீதமுள்ளது. இதில் மேலும் சில விக்கெட்டுக்கள் வீ்ழ்த்தி 85 விக்கட்டுகளை வீழ்த்திவிட்டால், டெஸ்ட் அரங்கில் 100 விக்கட்டுகள் என்ற மைல்கல்லை எட்ட 15 விக்கட்டுகள் தேவை.

13 போட்டிகளில் 81 விக்கட்டுகள் என்ற இலக்கை சுமார் 100 ஆண்டுகளாக எந்தவொரு வீரரும் தொட்டதில்லை. 19ஆவது நூற்றாண்டில் அதாவது 1896ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் லோமான் 16 போட்டிகளில் 100 விக்கட்டுகளை வீழ்த்தி சாதனைபடைத்துள்ளார். அவர் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 112 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரி 10.75 ஆகும்.

அதன்பின் 120 ஆண்டுகள் ஓடிவிட்டன. எந்த வீரராலும் லோமான் சாதனையை முறியடிக்க முடியவில்லை. தற்போது யாசீர் ஷாவிற்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

யாசீர் ஷா 13 போட்டிகளில் 81 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இன்னும் இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் மற்றும் ஒரு இனிங்ஸ் மீதமுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 7 இனிங்ஸ் உள்ளது. இதில் 19 விக்கட்டுகளை வீழ்த்தினால் 19ஆவது நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட சாதனையை 21ஆவது நூற்றாண்டில் யாசீர் ஷாவால் முறியடிக்க முடியும்.

இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி தமது முதல்  இனிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 99.2 ஓவர்களில் 339 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. இதில் தலைவர் மிஸ்பா உல் ஹக் சதம் அடித்து அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவருக்குத் துணையாக ஹபீஸ் 40 ஓட்டங்களையும், அசாத்  ஷபிக் 73 ஓட்டங்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ் 6 விக்கட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 67 ஓட்டங்கள்  முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி தமது 2ஆவது இனிங்ஸைத் தொடங்கியது. 1ஆவது இனிங்ஸில் 40 ஓட்டங்களைப் பெற்ற முஹமத்  ஹபீஸ் ஓட்டங்கள் எதுவும்  எடுக்காமல் ஸ்டுவர்ட் ப்ரோட் வீசிய  பந்தில் ஆட்டம் இழந்தார்.

அந்த அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. பாகிஸ்தான் அணியின் 2ஆவது இனிங்ஸில் அசாத் சபீக் 49 ஓட்டங்களையும், சர்ப்ராஸ் அஹமத் 45 ஓட்டங்களையும் பந்து வீச்சில் கலக்கிய யசீர் ஷா 30 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்று இருந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் முதல் இனிங்ஸில் 6 விக்கட்டுகளை சாய்த்த கிறிஸ் வோக்ஸ் மறுபடியும் துல்லியமாக பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கட்டுகளை வீழ்த்திய பெருமையை பெற்றதோடு தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்வில் போட்டி ஒன்றில் பெற்ற 1ஆவது 10 விக்கட்டுகளாக இது அமைந்தது.  அது மட்டுமில்லாமல் லோர்ட்ஸ் மைதானத்தில் போட்டியொன்றில் 10 விக்கட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் வோக்ஸ் தனது பெயரை பதித்தார். இவரை தவிர இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

3ஆவது நாள் முடிவின் போது பாகிஸ்தான் அணி 2 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 281 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டி காலநிலை பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் இருந்தால்  நிச்சயமாக ஒரு முடிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது எனலாம். தற்போது வரை இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்புகள் இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் பக்கம் வெற்றி வாய்ப்பு சற்று கூடிய அளவில் காணப்படுகிறது. மீதமுள்ள 2 விக்கட்டுகள் வீழவதற்குள் பாகிஸ்தான் அணி இன்னும் 30-40 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ளவார்களானால் போட்டியின் முழுப் போக்கும் பாகிஸ்தான் பக்கம் திரும்பலாம். ஆனால் கிரிக்கட்டில் எதையும் உறுதியாகக் கூறமுடியாது. போட்டியின் 4ஆவது தீர்மானமிகு நாள் இன்று நடைபெறவுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

HIghlights - England V Pakistan 1st Test 2016 Day 3