கிழக்கு மாகாண உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சம்பியனாகத் தெரிவு

292

கிழக்கு மாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் மாகாண சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அம்பாரை மாவட்ட அணியை 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தே மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அணி கிழக்கு மாகாணம் சார்பாக தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாணம் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது.

கடந்த முறை 2017 இல் மட்டக்களப்பு மாவட்டம் சம்பியனாகத் தெரிவானதால் இம்முறை நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்காரணமாக அம்பாரை மாவட்ட அணிக்கும், திருகோணமலை மாவட்ட அணிக்கும் இடையில் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாலசத்தில் அம்பாரை மாவட்ட அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியுடன் மோதியது.

பார்சிலோனாவில் இருந்து விலகியது பணத்துக்காக அல்ல – நெய்மர்

இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீராங்கனைகள் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டு கோல்களைப் பெற்றதுடன் எதிரணி வீரா்கள் கோல்கள் அடிக்காதவாறு பந்து தடுப்பிலும் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட அணி சார்பாக பட்டிப்பளை பிரதேசத்தின் கடுக்காமுனை அருள்நேசபுரம் ஆதவன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் சப்ரி நஸார், பட்டிப்பளை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஆர். யோகானந்தராஜா மற்றும் ஆதவன் விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள் ஆகியோர் இவ்வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினர்.

இதேவேளை ஆண்களுக்கான மாகாண உதைபந்தாட்டப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியும், திருகோணமலை மாவட்ட அணியும் மோதியது. இதில் 2 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

போட்டியின் முதல் பாதியில் மட்டக்களப்பு மாவட்ட அணிக்குக் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோல் ஒன்றினைப் பெற்றனர். இரண்டாவது பாதியில் கிடைத்த ப்ரி கிக்கை (Free Kick) கோலாக மாற்றியதால் 2 – 0 என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணி முன்னணியில் இருந்தது. இந்த வேளையில் திருகோணமலை மாவட்ட அணி வீரா் தலையினால் தட்டி கோல் ஒன்றினைப் பெற்றார். போட்டி முடிவடைவதற்கு 1 நிமிடம் இருக்கின்ற நிலையில் திருகோணமலை மாவட்ட அணி கோல் ஒன்றினைப் பெற்றது. பெறப்பட்ட கோல் ஓப்சைட்டாக அடிக்கப்பட்டதாக மத்தியஸ்தரால் அறிவிக்கப்பட்டதால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

காலிறுதியில் வெற்றி பெற்ற SLASC, SLAC, MIC, GW அணிகள்

இந்த அடிப்படையில் மட்டக்கப்பு மாவட்ட அணி 2 -1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இறுதிப் போட்டி மாலை 3.30 மணிக்கு அம்பாரை மாவட்ட அணிக்கும், மட்டக்களப்பு மாவட்ட அணிக்கும் இடையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமது வீரா்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைக்கு போட்டியில் பங்குபற்ற முடியாது என்றும் மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தனர்.

இதன் காரணமாக இறுதிப்போட்டி செப்டம்பர் மாதம் 7ம் திகதி கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.