IPL தொடரை இந்தியாவில் நடாத்துங்கள் – வழக்கறிஞர் கோரிக்கை

369

இந்தியாவின் புனே நகரினை சேர்ந்த வழக்கறிஞர் அபிஷேக் லக்கூ, இந்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் இந்தியாவில் நடைபெறாமல் வெளிநாட்டில் நடக்கும் பட்சத்தில் அது நாட்டுக்கு பாரிய பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருக்கின்றார்.

டோனியின் தலைவர் பதவியை காப்பாற்றிய ஸ்ரீனிவாசன்

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டின் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். தொடரினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த ஐ.பி.எல். தொடரின் ஏற்பாட்டுக்குழு முடிவு செய்திருக்கின்றது.  

இந்த முடிவுக்கு அமைய இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரினை நடாத்துவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறாக விடயங்கள் இருக்கும் நிலையிலையே வழக்கறிஞரான அபிஷேக் லக்கூ ஐ.பி.எல். தொடரினை வெளிநாட்டில் நடாத்துவது நாட்டுக்கு பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். 

இதேநேரம் அபிஷேக் லக்கூ ஐ.பி.எல். தொடரினை இந்தியாவில் நடாத்துவது தொடர்பில் பரிசீலிக்க மனு ஒன்றினையும், மும்பை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு (2019) சுமார் 475 பில்லியன் ரூபாய்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு வருமானமாக பெற்றுத்தந்தது. இது மட்டுமின்றி இந்த கிரிக்கெட் தொடர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பலருக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தியதோடு, பல வியாபார வாய்ப்புக்களையும் உருவாக்கியது. அதோடு, இந்தியாவின் சுற்றுலாத்துறை வளர்வதற்கான வாய்ப்பு ஒன்றினையும் ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தியது.  

டோனியை பின்பற்றி ஓய்வை அறிவித்தார் சுரேஸ் ரெய்னா

இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டே அபிஷேக் லக்கூ ஐ.பி.எல். தொடர் வெளிநாட்டில் நடைபெறுவது தமது நாடான இந்தியாவுக்கு பாரிய வருமான இழப்பு ஒன்றினை ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருக்கின்றார். 

மேலும் அபிஷேக் லக்கூ கொடுத்திருந்த மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 

”ஐ.பி.எல். தொடர் என்பது ஒரு நலத்திட்டத்திற்கான நிகழ்வு அல்ல. கொவிட்-19  தொற்று (இந்தியாவில்) அனைத்து வியாபாரங்களுக்கும் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. (இவ்வாறான நிலையில்) ஐ.பி.எல். தொடரினை இந்தியாவில் நடாத்துவது நாட்டுக்கு தேவையாக இருக்கும் மிகப் பெரிய பொருளதார ஊக்கமாக இருக்கும்.” 

ஐ.பி.எல். தொடர் பற்றி அபிஷேக் லக்கூ வழங்கிய மனு பரிசீலிக்கப்பட்டு அது தொடர்பிலான முடிவு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க