டி20 தொடரை வைட்வொஷ் செய்த இந்திய அணி

68
India vs West Indies

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான இந்திய அணியின் கிரிகெட் சுற்றுத் தொடரில் நேற்று (6) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி  3-0 என தொடரை கைப்பற்றியது. 

ஐசிசியின் எச்சரிக்கைக்குள்ளான இந்திய வீரர்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது T20I ……….

மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வழங்கியிருந்தார். இப்போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்ததுடன் சுழல் பந்துவீச்சாளரான ராகுல் சஹார் தனது சர்வதேச டி20 அறிமுக போட்டியில் விளையாடியிருந்தார். 

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியை ஆரம்பம் முதல் தனது வேகத்தால் மிரட்டிய தீபக் சஹார், முதல் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிறையில் பொல்லார்ட் மற்றும் புராண் ஆகியோரின் 66 ஓட்ட இணைப்பாட்டம் அணிக்கு பலம் சேர்த்திருந்தது

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி தமது இன்னிங்ஸிற்காக 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் பொல்லார்ட் 58 மற்றும் ரோவ்மன் பவல் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை பெற்றிருந்தனர். பந்துவீச்சில் தீபக் சஹார் 3 மற்றும் நவ்தீப் ஷைனி 2 விக்கெட்டுகள் என கைப்பற்றினர்

முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்த நிலையில் 147 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 27 ஓட்டங்களுக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லோகேஷ் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும் 3ஆவது விக்கெட்டுகாக இணைந்த அணித்தலைவர் கோஹ்லி மற்றும் முதல் இரண்டு போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய ரிஷாப் பண்ட் ஆகியோரின் சத இணைப்பாட்டம் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது

ரோஹித்தின் சாதனையுடன் டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கான ……..

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கோஹ்லி 59 ஓட்டங்களையும் பண்ட் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் ஒசேன் தோமஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக தீபக் சஹார் தெரிவானதுடன் தொடரின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணியின் சகலதுறை வீரர் குருநால் பாண்டியா தெரிவானார்.  

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (8) ஆரம்பமாகவுள்ளது

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் அணி 146/6 (20) – பொல்லார்ட் 58, பவல் 32*, தீபக் சஹார் 4/3, ஷைனி 34/2 

இந்திய அணி 150/3 (19.1) –  பண்ட் 65*, கோஹ்லி 59, தோமஸ் 29/2

முடிவு: இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<