படுதோல்வியுடன் T20 தொடரினை முழுமையாக இழந்த இலங்கை அணி

94
AFP/Getty Images

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரின் இறுதிப் போட்டியில் 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கும், இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினையும் 3-0 எனக் கைப்பற்றி, இலங்கை அணியினை வைட்வொஷ் செய்துள்ளது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக ஹேரத்

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறுகின்ற இந்த T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற இலங்கை அணி தொடரினை 2-0 என ஏற்கனவே இழந்த நிலையில், T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி சௌத்தம்ப்படன் நகரில் சனிக்கிழமை (26) ஆரம்பமானது. 

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இங்கிலாந்து அணிக்கு வழங்கினார். 

இப்போட்டிக்கான இலங்கை அணி, இந்த T20 தொடரில் ஆறுதல் வெற்றியொன்றினை எதிர்பார்த்து அகில தனன்ஞய மற்றும் அவிஷ்க பெர்னான்டோ ஆகிய வீரர்களுக்குப் பதிலாக ஒசத பெர்னான்டோ, லக்ஷான் சந்தகன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க T20 தொடரினை ஏற்கனவே கைப்பற்றிய இங்கிலாந்து அணி ஜேசன் ரோய் மற்றும் மார்க் வூட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கி மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரினையும் அழைத்திருந்தது. 

இலங்கை XI – தனுஷ்க குணத்திலக்க, ஒசத பெர்னான்டோ, குசல் பெரேரா (தலைவர்), குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, இசுரு உதான, லக்ஷான் சந்தகன், துஷ்மன்த சமீர, பினுர பெர்னாந்து

இங்கிலாந்து XI – மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், டாவிட் மலான், ஜொன்னி பெயர்ஸ்டோவ், இயன் மோர்கன் (தலைவர்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டன், டேவிட் வில்லி, ஆதீல் ரஷீட், கிறிஸ் வோக்ஸ்

தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப ஜோடியாக வந்த ஜொன்னி பெயர்ஸ்டோவ் மற்றும் டாவிட் மலான் ஆகியோர் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 105 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தனர். அதோடு, இந்த சிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட துவக்கத்துடன் இரு வீரர்களும் அரைச்சதம் கடக்க இங்கிலாந்து அணி வலுவான நிலைக்குச் சென்றது. 

எனினும், இலங்கை அணி சார்பில் துஷ்மன்த சமீர தனது பந்துவீச்சு மூலம் சிறிது அழுத்தம் பிரயோகிக்க பாரிய மொத்த ஓட்ட எண்ணிக்கையினை அடையவிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் அன்ரே ரசல்

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக T20 போட்டிகளில் தன்னுடைய 11ஆவது அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்த டாவிட் மலான் 48 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 48 பந்துகளில் 76 ஓட்டங்களினைப் பெற்றார். மறுமுனையில், T20 போட்டிகளில் தன்னுடைய 7ஆவது அரைச்சதத்தினைப் பெற்ற ஜொன்னி பெயர்ஸ்டோவ் 43 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் 4 ஓவர்களில் துஷ்மன்த சமீர வெறும் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி T20 போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியினை பதிவு செய்தார். 

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 181 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றம் காட்டி, 18.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 91 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வியடைந்தது. 

இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறும் அவிஷ்க பெர்னாண்டோ

மிகவும் மோசமான செயற்பட்ட இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில், பின்வரிசை வீரரான பினுர பெர்னான்டோ மாத்திரமே 20 ஓட்டங்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை கிரிக்கெட் அணியினை திக்குமுக்காடச் செய்த இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில், டேவிட் வில்லி 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க சாம் கர்ரன், 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார். 

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் டாவிட் மலானும், தொடர் நாயகனாக சாம் கர்ரனும் தெரிவாகினர்.

இப்போட்டியில் கிடைத்த தோல்வியுடன் T20 தொடரினை முழுமையாக இழந்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி தமது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அடுத்ததாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றது. 

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒருநாள் சுபர் லீக்கிற்காக நடைபெறும் இந்த ஒருநாள் தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) செஸ்டர்-லே-ஸ்ரிட் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 

போட்டியின் சுருக்கம்

முடிவு – இங்கிலாந்து கிரிக்கெட் அணி 89 ஓட்டங்களால் வெற்றி 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…