ஒருநாள் தொடரை தக்கவைத்த மேற்கிந்திய தீவுகள் அணி

171
Image Courtesy - BCCI Twitter

நேற்று (27) நடைபெற்ற இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்ததோடு மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக பெபியன் அலென் எனும் புதுமுக வீரர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார்.

விறுவிறுப்பான ஆட்டத்தை பௌண்டரி மூலம் சமப்படுத்திய மேற்கிந்திய தீவுகள்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் சர்வதேச  போட்டியில் கடைசிப் பந்தில் பௌண்டரி விளாசி ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்களை பெற்று போட்டியை சமப்படுத்திய ஷாய் ஹோப் இத்தொடரில் மற்றுமொரு சதம் பெறும் வாய்ப்பை வெறும் 5 ஓட்டங்களால் தவறவிட்டு 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அது தவிர ஆஷ்லி நேர்ஸ், ஹிட்மயர் மற்றும் அணித்தலைவர் ஹோல்டர் ஆகியோர் முறையே 40, 37, 32 ஆகிய ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். சிறப்பாக பந்து வீசிய ஜஸ்ப்ரிட் பும்ரா 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் இந்திய அணி சார்பாக கைப்பற்றியிருந்தனர்.

வெற்றி பெறுவதற்கு 284 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 43 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் சாதனை வீரரும் இந்திய அணித்தலைவருமான விராட் கோஹ்லி இப்போட்டியில் 107 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். இது இத்தொடரில் அவர் பெற்ற மூன்றாவது தொடர்ச்சியான சதமாகும். இது இந்திய துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகும். மேலும் ஷிகர் தவான் 35 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டதை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் மார்லன் சமுவெல்ஸ் 3 விக்கெட்டுகளையும் மெக்கோய், நேர்ஸ் மற்றும் ஹோல்டர் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆஷ்லி நேர்ஸ் தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 283/9 (50) – ஷாய் ஹோப் 95, ஆஷ்லி நேர்ஸ் 40, ஜஸ்ப்ரிட் பும்ரா 35/4, குல்தீப் யாதவ் 52/2

இந்தியா – 240 (47.4) – விராட் கோஹ்லி 107, ஷிகர் தவான் 35, மார்லன் சமுவெல்ஸ் 12/3, மெக்கோய் 38/2, ஆஷ்லி நேர்ஸ் 43/2

முடிவு – மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<