சாதனைகளுடன் டெஸ்ட் தொடரை ஆரம்பித்த இந்திய அணி

103
Image Courtesy - ICC

இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று சர்வதேச டி20 போட்டிகள் என முழுமையான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

தொடரின் முதலாவது போட்டியாக இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தியாவின் ராஜ்கோட் நகரில் கடந்த நான்காம் (4) திகதி ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பாட தீர்மானித்தார். இப்போட்டியில் இந்திய அணி சார்பாக 19 வயதுக்கு உட்பட்ட இந்தியாவின் இளையோர் அணித்தலைவராக செயற்பட்ட ப்ரித்திவ் ஷாவ் அறிமுக வீரராக இணைக்கப்பட்டிருந்தார். அதேபோன்று வேகப் பந்துவீச்சாளரான ஷேர்மன் லுயிஸ் மேற்கிந்திய அணி சார்பாகவும் அறிமுகமாகியிருந்தார்.

விராட் கோஹ்லியின் இணையத்தளத்தை ஊடுருவிய பங்களாதேஷ் ரசிகர்கள்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அணி தோல்வியுற்ற அதிருப்தியில், பங்களாதேஷைச் சேர்ந்த இனந்தெரியாத…

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி மூன்று ஓட்டங்களை பெற்றிருந்த வேளை கே.எல்.ராகுல் ஓட்டமெதுவும் பெறாமல் ஓய்வறை திரும்பினார். பின்னர் அறிமுக வீரர் ப்ரித்திவ் ஷாவ் மற்றும் அனுபவ வீரர் புஜாரா ஆகியோர் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 206 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். புஜாரா 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுபுறத்தில் ப்ரித்திவ் ஷாவ் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்து சாதனை வீரராக வரலாற்றில் இடம் பிடித்தார்.

இப்போட்டியில் ப்ரித்திவ் ஷாவ் இள வயதில் டெஸ்ட் சதம் பெற்ற உலகின்  7 ஆவது வீரராகவும் இந்தியாவின் 2ஆவது வீரராகவும் மேலும் அறிமுக போட்டிகளில் சதம் பெற்ற உலகின் 4ஆவது இளம் வீரராகவும் வரலாறு படைத்த அவர் இறுதியில் 134 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நிறைவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 364 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருந்தது. விராட் கோஹ்லி மற்றும் ரிஷாஃப் பான்ட் ஆகியோர் முறையே ஆட்டமிழக்காமல் 72 மற்றும் 17 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று (5) இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த  இந்திய அணி அதிரடியாகவும் நிதானமான முறையிலும் விளையாடியது. போட்டியின் இரண்டாவது சதமாக இந்திய அணித்தலைவர் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் தனது 24ஆவது சதத்தை பூர்ததி செய்தார். டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 24 சதங்கள் கடந்த வீரர்களில் டொனல்ட் பிரட்மனுக்கு அடுத்த படியாக விராட் கோஹ்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பான்ட் 84 பந்துகளில் 92 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 133 ஓட்டங்களை இணப்பாட்டமாக பெற்றிருந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா கோஹ்லியுடன் இணைந்து சிறப்பாக விளையாட அணியின் ஓட்ட எண்ணிக்கை 534 ஆக இருந்த போது கோஹ்லி 139 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார். இது இப்போட்டியில் இந்திய அணி சார்பாக பெறப்பட்ட மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 649 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இது இந்திய அணியால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் பெறப்பட்ட அதி கூடிய ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

துல்ஷான், நுவனிது ஆகியோர் அசத்த இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை

பங்களாதேஷில் நடைபெற்று வருகின்ற இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்…

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்து வீச்சாளர்களை எதிர் கொள்வதில் சிரமப்பட இரண்டாம் நாள் நிறைவில் அவ்வணி 94 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. இன்றைய மூன்றாம் நாளில் தமது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக ரோஸ்டன் சேஸ் அதிக பட்சமாக 53 ஓட்டங்களையும் கீமோ போல் 47 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

முதல் இன்னிங்சுக்காக 468 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி பலோ ஒன் (follow on) முறையில் தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது.

அந்த வகையில் தமது இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி தமது இரண்டாவது இன்னிங்சிலும் மோசமான துடுப்பாட்டம் மற்றும் இந்திய அணியின் துள்ளியமான சுழல் பந்து வீச்சின் காரணமாக சகல விக்கெட்டுகளையும் இழந்து 196 ஓட்டங்களை மட்டுமே பெற்று இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

மேற்கிந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கிரன் பவல் அதிக பட்சமாக 83 ஓட்டங்களை பெற்று கொண்டார். பந்து வீச்சில் குல்திப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். குல்திப் யாதவ் பெற்ற ஐந்து விக்கெட்டுகள் மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போன்ற மூன்று வகையான சர்வதேச போட்டிகளிலும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய உலகின் 7 ஆவது வீரராக சாதனை ஏட்டில் பதிவானார்.

aaa

மேற்கிந்திய தீவுகள் அணியின் இத்தோல்வியானது இந்திய அணிக்கு எதிராக பெறப்பட்ட  மோசமான தோல்வியாகும். அதேபோன்று இவ்வெற்றி இந்திய அணி பாரிய ஓட்ட வித்தியாசத்தில் பெற்றுக் கொண்ட டெஸ்ட் வெற்றியாகும். மேலும் இந்த வெற்றியானது இந்திய அணி இந்திய மண்ணில் பெறப்பட்ட 100 ஆவது டெஸ்ட் வெற்றியாகும்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணியின் இளம் அறிமுக வீரர் ப்ரித்திவ் ஷாவ் தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 649/9d – விராட் கோஹ்லி 139, ப்ரித்திவ் ஷாவ் 134, ரவீந்திர ஜடேஜா 100* பிசூ 217/4, லுயிஸ் 93/2

மேற்கிந்திய தீவுகள் (முதல் இன்னிங்ஸ்) – 181 – ரோஸ்டன் சேஸ் 53, கீமோ போல் 47, ரவிசந்திரன் அஷ்வின் 37/4, மொஹமட் ஷமி 22/2

மேற்கிந்திய தீவுகள் அணி  (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 196 – கிரன் பவல் 83, குல்திப் யாதவ் 57/5, ரவீந்திர ஜடேஜா 35/3, ரவிசந்திரன் அஷ்வின் 71/2

முடிவு – இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களால் வெற்றி

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<