மறுபடியும் போட்டியில் மழை குறுக்கீடு

190
ind v south africa

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர்  ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம் செய்தார். மேற்கிந்திய தீவுகள் அணியில் அல்சாரி ஜோசப் நீக்கப்பட்டு தேவேந்திர பிஷூ சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்திய அணியில் தவான், ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு புஜாரா மற்றும் முரளி விஜய் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தார்கள்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோன்சன், கிரேக் பிராத்வைட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரும் முதல் விக்கட்டுக்காக 31 ஓட்டங்களை நிதானமாக ஆடிப் பகிர்ந்தார்கள்.

அதன் பின் ஜோன்சன் 9 ஓட்டங்களோடு இஷாந்த் சர்மா வீசிய பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பின் களமிறங்கிய டேரன் பிராவோ நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. அவர் 10 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரவி அஷ்வினின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டம் இழந்தார்.

பின் களமிறங்கிய மார்லன் சாமுவேல்ஸ் கிரேக் பிராத்வைடோடு இணைந்து நிதான ஆட்டத்தை கடைபிடித்தார்.

ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி 62 ஓட்டங்களைப் பெற்று இருந்த நிலையில் மழை பொழிய ஆரம்பித்தது. அந்த மழை நீண்ட நேரமாக நீடித்ததால் 1ஆவது நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கட்டுகளை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. களத்தில் கிரேக் பிராத்வைட் 32 ஓட்டங்களோடும் மார்லன் சாமுவேல்ஸ் 04 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

வீழ்ந்த 2 விக்கட்டுகளை இஷாந்த் ஷர்மா மற்றும ரவி அஷ்வின் தலா 1 விக்கட் வீதம் பங்கு போட்டனர்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 62/2

கிரேக் பிராத்வைட் 32*, டேரன் பிராவோ 10

இஷாந்த் ஷர்மா 7/1, ரவி அஷ்வின் 22/1