இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 5ஆவதும், தொடரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியுமான மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டி நேற்று (29) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

அமித் மிஷ்ராவின் அதிரடிப் பந்து வீச்சில் சிக்குண்ட நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களால் இந்தியாவுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை இழந்தது.

இந்த இறுதிப் போட்டிக்காக முன்று சுழல்பந்து வீச்சாளர்களைத் தெரிவுசெய்த இந்திய நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. தொடரை தீர்மானிக்கும் இந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சிறப்பாகத் துடுப்பாடிய ரோஹித் சர்மா 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 70 ஓட்டங்களையும் விராத் கொஹ்லி 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 65 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணிக்காக அரைச் சதம் கடந்தனர். இறுதி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய கேதர் ஜாதவ் ஆட்டம் இழக்காமல் 37 பந்துகளுக்கு 39 ஓட்டங்களையும், அக்சர் பட்டேல் 18 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

IND vs NZ 5th ODI270 என்ற ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, முதல் ஓவரில் மார்டின் கப்டில் உமேஷ் யாதவின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து வந்த நியூசிலாந்து அணி வீரர்களும் ஆட்டமிழந்து செல்ல 23.1 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 190 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

இந்திய அணி சார்பாக அதிரடியாக பந்து வீசிய அமித் மிஷ்ரா 6 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது கன்னிப் போட்டியில் விளையாடிய ஜெயந்த் யாதவ் 4 ஓவர்களுக்கு 8 ஓட்டங்களைக் கொடுத்து 1 விக்கெட்டினைக் கைப்பற்றிக்கொண்டார்.

ஐந்தாவதும் இறுதிப் போட்டியுமான இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் இப்போட்டித் தொடரை 3-2 கணக்கில் வென்றது. அத்துடன் ஆட்ட நாயகன் மற்றும் போட்டித் தொடர் நாயகன் விருதுகளை அமித் மிஷ்ரா பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இந்திய அணி – 269/6 (50) – ரோஹித் ஷர்மா 70, விரத் கொஹ்லி 65, கேதர் ஜாதவ் 39*, அக்சர் பட்டேல் 24, ட்ரென்ட் போல்ட் 2/52

 

நியூசிலாந்து அணி – 79 (23.1) – கேன் வில்லியம்சன் 27, டொம் லேத்தம் 19, ரொஸ் டெய்லர் 19, அமித் மிஷ்ரா 5/18, அக்சர் பட்டேல் 2/9

போட்டி முடிவு – 190 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.