சுபர் 12 சுற்று குழு 1 அணிகளின் நிலை எவ்வாறு உள்ளன?

150
 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணம் அதன் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கின்றது.

அதன்படி T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்று வெள்ளிக்கிழமை (22) நிறைவடைந்திருக்கும் நிலையில், குறித்த சுற்றில் இருந்து இலங்கை, பங்களாதேஷ் அணிகள் சுபர் 12 சுற்றின் குழு 1 இற்கும், ஸ்கொட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகள் சுபர் 12 சுற்றின் குழு 2 இற்கும் சென்றிருக்கின்றன.

<<சாதனை வெற்றியுடன் நெதர்லாந்தினை தோற்கடித்த இலங்கை>>

சுபர் 12 சுற்றின் குழுக்கள் இரண்டிலும் தலா ஆறு அணிகள் காணப்படுவதோடு, இந்த சுற்று T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளில் ஆடும் அணிகளை தீர்மானிக்கும் சுற்றாகவும் அமைகின்றது.

சுபர் 12 சுற்றின் குழு 2 இணைப் பார்க்கப்போனால் அங்கே நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என அதிக சவால் உருவாக்க கூடிய மூன்று அணிகளே காணப்படுகின்றன. ஆனால், குழு 1 இணை நோக்கும் இந்த குழுவில் காணப்படும் அனைத்து அணிகளும் ஏனைய அணிகளுக்கு மிகப் பெரிய அழுத்தம் தரக்கூடிய விதத்தில் காணப்படுகின்றன. இதனால், T20 உலகக் கிண்ணத்தின் குழு 1 ஆனது Group of Death என தற்போது சமூக வலைதளங்களில் அழைக்கப்படுகின்றது.

இனி நாம் சுபர் 12 குழு 1 இல் காணப்படும் அணிகள் குறித்தான பார்வையினை நோக்குவோம்.

மேற்கிந்திய தீவுகள்

T20 உலகக் கிண்ணத்தில் இரண்டு தடவைகள் சம்பியன் பட்டம் வென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் தொடரின் நடப்புச் சம்பியன்களாக சுபர் 12 சுற்றின் குழு 1 இல் இந்த T20 உலகக் கிண்ணத்தில் போட்டியிடவுள்ளது.

<<சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்று வரலாறு படைத்தது நமீபியா>>

மேற்கிந்திய தீவுகள் தமது பயிற்சிப் போட்டிகள் இரண்டிலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தோல்வியடைந்த போதும் அவ்வணி நலிவடைந்துவிட்டது என மதிப்பீடு செய்யக் கூடாது. ஏனெனில், மேற்கிந்திய தீவுகள் T20 போட்டிகளுக்கான சிறப்பு வீரர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட அணியாக எப்போதும் காணப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் குழாத்தினை நோக்கும் போது அணியின் எதிர்பார்ப்பு வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் அன்ட்ரு ரசல் ஆகியோர் காணப்பட, கீரோன் பொலார்ட் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகியோர் அணியின் ஏனைய நம்பிக்கையாக காணப்படுகின்றனர்.

அவுஸ்திரேலியா

ஐந்து தடவைகள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை சுவீகரித்த போதும், அவுஸ்திரேலிய அணிக்கு T20 உலகக் கிண்ணம் என்பது இன்றுவரை சிம்ம சொப்பனமாகவே காணப்படுகின்றது. எனவே, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏழாவது முறையாக T20 உலகக் கிண்ண கனவுகளுடன் இந்த T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்குகின்றது.

அதேநேரம் இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ண அணிகளில் அதிக பலம்வாய்ந்தவீரர்கள் கொண்ட ஒரு தொகுதியாகவும் அவுஸ்திரேலிய அணி காணப்படுகின்றது. குறிப்பாக T20 போட்டிகளுக்கான சிறப்பு வீரர்களான டேவிட் வோர்னர், அணித்தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் அணியின் எதிர்பார்ப்பு வீரர்களாக காணப்பட, சகலதுறைகளிலும் பிரகாசிக்கும் ஆற்றல் கொண்ட கிளன் மெக்ஸ்வெல் அணிக்கு இன்னும் பெறுமதி சேர்க்கின்றார்.

இங்கிலாந்து

T20 உலகக் கிண்ணத்தினை கடந்த 2010ஆம் ஆண்டில் வெற்றி கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, குழு 1 இல் காணப்படும் ஏனைய முன்னணி அணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது. கடைசியாக நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இங்கிலாந்து, இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தொடரிலும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற நிச்சயம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

<<“மஹேலவின் வருகை இலங்கை அணிக்கு மிகப்பெரிய போனஸ்” – முரளி>>

இங்கிலாந்து அணியின் வீரர்கள் குழாத்தினை நோக்கும் போது அவ்வணியின் துடுப்பாட்டவரிசையினை இயன் மோர்கன், ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர் மற்றும் டாவிட் மலான் ஆகியோர் பலப்படுத்த அணியின் பந்துவீச்சுத்துறை ஆதில் ரஷீட், மொயின் அலி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் டைமால் மில்ஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டன் போன்றோரினால் மெருகூட்டப்படுகின்றது.

தென்னாபிரிக்கா

இன்னும் T20 உலகக் கிண்ணம் ஒன்றினை வெற்றி கொள்ளாத போதும், தென்னாபிரிக்க அணி இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தினை வெற்றி கொள்ளக்கூடிய எதிர்பார்க்கை அணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அதேநேரம், அவ்வணி பயிற்சிப் போட்டிகளில் பலமிக்க பந்துவீச்சு வரிசை பாகிஸ்தான் போன்ற  அணிகளுக்கு எதிராக வெளிப்படுத்திய துடுப்பாட்டம் இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தொடரில், தென்னாபிரிக்காவின் ஆதிக்கம் இருக்கப்போகின்றது என்பதனையும் வெளிக்காட்டுகின்றது.

>>ஹேரத்திற்கு மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் வாழ்நாள் உறுப்புரிமை>>

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வரிசையினை நோக்கும் போது அணிக்கு பலம் தரும் வீரர்களாக குயின்டன் டி கொக், ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் காணப்பட, பந்துவீச்சில் அவ்வணிக்கு ககிஸோ றபாடா, தப்ரைஸ் சம்ஷி மற்றும் கேசவ் மஹராஜ் போன்றோரின் பங்களிப்பு காணப்படுகின்றது.

இலங்கை

T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் இருந்து சுபர் 12 சுற்றுக்குள் நுழைந்த முதல் அணியாக காணப்படும் இலங்கை கிரிக்கெட் அணி, நடைபெற்ற போட்டிகளை வைத்துப் பார்க்கும் சிறந்தபந்துவீச்சு தொகுதியினைக் கொண்ட அணியாகவும் காணப்படுகின்றது. இலங்கை அணி, இந்த T20 உலகக் கிண்ணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படாது போனாலும், கடந்த காலப்பதிவுகள் இலங்கை கிரிக்கெட் அணி திருப்பங்களை ஏற்படுத்தியிருந்ததனை சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறையினை நோக்கும் போது இலங்கைவீரர்கள் தமது முன்வரிசையினை சீர்செய்ய வேண்டி இருக்கின்ற போதும் முன்வரிசை வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் இலங்கையின் துடுப்பாட்டத்துறைக்கு பெறுமதி சேர்க்க, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன மற்றும் துஷ்மன்த சமீர, லஹிரு குமார ஆகியோர் பந்துவீச்சில் இலங்கை அணிக்கு பெறுமதி சேர்க்கின்றனர்.

<<Jaffna Kings அணியின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் விபரம்>>

பங்களாதேஷ்

T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றின் குழு 2 இற்குள் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், ஸ்கொட்லாந்துடன் அடைந்த மோசமான தோல்வி காரணமாக பங்களாதேஷ் குழு 2 அணிகளுடன், T20 உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்புக்காக போட்டியிடுகின்றது.

அனுபவம் கொண்ட வீரர்களாக காணப்படும் சகீப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹமதுல்லா ஆகியோர் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்துறைக்கு பிரதான வீரர்களாக காணப்பட, முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் தஸ்கின் அஹமட் ஆகியோர் அணிக்கு பந்துவீச்சில் நம்பிக்கை தருகின்றனர்.

குழு 1 போட்டி அட்டவணை

அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்க – ஒக்டோபர் 23 – அபுதாபி

இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள் – ஒக்டோபர் 23 – துபாய்

இலங்கை எதிர் பங்களாதேஷ் – ஒக்டோபர் 24 – ஷார்ஜா

தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்திய தீவுகள் – ஒக்டோபர் 26 – துபாய்

இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் – ஒக்டோபர் 27 – அபுதாபி

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா – ஒக்டோர் 28 – துபாய்

மேற்கிந்திய தீவுகள் எதிர் பங்களாதேஷ் – ஒக்டோபர் 29 – ஷார்ஜா

இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா – ஒக்டோபர் 30 – துபாய்

தென்னாபிரிக்கா எதிர் இலங்கை – ஒக்டோபர் 30 – ஷார்ஜா

இங்கிலாந்து எதிர் இலங்கை – நவம்பர் 01 – ஷார்ஜா

தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் – நவம்பர் 02 – அபுதாபி

அவுஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ் – நவம்பர் 04 – துபாய்

மேற்கிந்திய தீவுகள் எதிர் இலங்கை – நவம்பர் 04 – துபாய்

அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் – நவம்பர் 06 – அபுதாபி

இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா – நவம்பர் 06 – ஷார்ஜா

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>