Jaffna Kings அணியின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் விபரம்

Lanka Premier League – 2021

248
IPL

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் (LPL) புதிய பெயர் மற்றும் புதிய உரிமையாளரின் கீழ் விளையாடவுள்ள ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தொடர்பான விபரங்கள் இன்று (21) அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் சம்பியன் பட்டம் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவராகச் செயல்பட்ட திசர பெரேரா, இந்த ஆண்டுக்கான LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவராக செயல்படவுள்ளார்.

இலங்கையின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரரான திசர பெரேரா, IPL, PSL, அபுதாபி T10, BPL, CPL உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டவராவார்.

அத்துடன், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட திலின கண்டம்பி, இம்முறை LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரரான திலின கண்டம்பி, தற்போது SSC கழகத்தின் பயிற்சியாளராக செயல்பட்டு வருவதுடன், இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற அபுதாபி T10 லீக்கில் பங்ளா டைகர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இயக்குனராகக் கடமையாற்றிய கணேசன் வாகீசன், ஜப்னா கிங்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், UKCC 3ஆம் பிரிவு கிரிக்கெட் பயிற்சியாளராக உள்ளார். அத்துடன், Cambridgeshire கனிஷ்ட பிராந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், சாரங்க விஜேரத்ன சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமைத்துவத்தில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, ஜப்னா அணியின் புதிய உரிமையாளராக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், லைகா நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அறிவிக்கப்பட்டார்.

இதேவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டு LPL தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<