டேவிஸ் கிண்ண டென்னிஸில் இலங்கைக்கு முதலிடம்

Davis Cup Tennis

91

இந்த ஆண்டு டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 4ஆம் குழுவில் சம்பியனானதன் மூலம், அடுத்த ஆண்டு (2023) ஆசிய பசுபிக் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் 3ஆம் குழுவின் கீழ் போட்டியிடும் வாய்ப்பை இலங்கை அணி பெற்றுக் கொண்டது.

‘ஏ’ குழுவின் கீழ் போட்டியிட்ட இலங்கை அணி, ஆரம்ப சுற்றில் 3-0 என்ற நேர் செட் கணக்கில் பங்களாதேஷ் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்து அக்குழுவில் முன்னிலை பெற்றது.

அதன் பின்னர் ‘பி’ குழுவில் முன்னிலை பெற்ற ஈராக் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2-0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் இலங்கை அணி, ஆசிய பசுபிக் 3ஆம் குழுவுக்கு தரம் உயர்த்தப்பட்டது.

இலங்கை மற்றும் ஈராக் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு ஒற்றையர் போட்டிகள் மற்றும் ஓர் இரட்டையர் போட்டி இடம்பெற்றிருந்த போதிலும், முதலிரண்டு ஒற்றையர் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதால் இரட்டையர் போட்டி கைவிடப்பட்டது.

ஒற்றையர் போட்டிகளில் இலங்கை சார்பாக ஹர்ஷன கொடமான்ன மற்றும் யசித டி சில்வா ஆகியோர் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.

இந்தப் போட்டி இலங்கை டென்னிஸ் சங்க களிமண் தரை டென்னிஸ் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதனிடையே, ஈராக் அணி, ஆரம்பச் சுற்றில் மாலைதீவுகள் மற்றும் புரூனே ஆகிய அணிகளை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ‘பி’ குழுவில் முதலிடத்தை பெற்று பின்னர், ஏமன் அணியை 2-1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

எனினும், இலங்கைக்கு எதிரான தோல்வியால், ஈராக் அடுத்த ஆண்டும் ஆசிய பசுபிக் 4ஆம் குழுவின் கீழ் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<