ஆஸி.யிடம் மோசமான தோல்வியடைந்த இலங்கை U19 மகளிர் அணி

ICC U19 Women’s T20 World Cup 2023

330

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிருக்கான 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரில் தங்களுடைய இறுதி லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது.

இந்தப்போட்டியில் தோல்வியடைந்த போதும் இலங்கை அணி சுபர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. எவ்வாறாயினும் முதல் சுற்று வெற்றிகள் சுபர் 6  சுற்றிலும் செல்லுபடியாகும் என்பதால், இலங்கை அணிக்கான அரையிறுதி வாய்ப்பு மிக குறைவாகவே காணப்படுகின்றது.

ஐசிசி தரவரிசையில் விராட் கோஹ்லிக்கு முன்னேற்றம்!

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி பந்துவீசிய இலங்கை மகளிர் அணிக்கு முதல் 10 ஓவர்கள் சிறப்பாக இருந்தபோதும், இறுதி 10 ஓவர்களில் அவுஸ்திரேலிய மகளிர் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான கெட் பேல் 27 ஓட்டங்களையும், சைனா ஜிஞ்சர் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து சிறந்த ஆரம்பத்தை பெற்றனர்.

முதல் 10 ஓவர்களில் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த அவுஸ்திரேலிய அணிக்கு, மத்தியவரிசை வீராங்கனைகள் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.

இதில் எல்லா ஹெய்வார்ட் 36 ஓட்டங்களையும், எமி ஸ்மித் மற்றும் லூசி எமில்டன் ஆகியோர் தலா 22 ஓட்டங்களையும் இறுதிக்கட்டத்தில் பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ரிஸ்மி சஞ்சனா 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்பம் முதல் அவுஸ்திரேலிய அணி தடுமாற்றத்தை கொடுத்தது. கடந்த 2 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை குவித்திருந்த அணித்தலைவி விஷ்மி குணரத்ன 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

நெத்மி சேனாரத்ன மாத்திரம் 11 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, வேறு எந்தவொரு வீராங்கனைகளும் இரட்டையிலக்க ஓட்டங்களை பெறவில்லை. இதன்காரணமாக வெறும் 51 ஓட்டங்களை பெற்றிருந்தபோது இலங்கை அணி 13 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மெகி கிளார்க், லூசி எமில்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சுபர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

  • அவுஸ்திரேலியா அணி – 159/5 (20), எல்லா ஹெய்வார்ட் 36, சைனா ஜிஞ்சர் 30, ரிஸ்மி சஞ்சனா 30/2
  • இலங்கை அணி – 51/10 (13), நெத்மி சேனாரத்ன 11, லுசி எமில்டன் 1/2, மெகி கிளார்க் 8/2
  • முடிவு – இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<