3TC கிரிக்கெட் போட்டியின் திகதி அறிவிப்பு

151

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் புதிய முயற்சியான மூன்று அணிகள் மோதும், 3TC கிரிக்கெட் போட்டி எதிர்வரும் (ஜூலை) 18ம் திகதி சுப்பர் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 14 வாரங்களாக தென்னாபிரிக்காவில் கொவிட்-19 வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த போட்டித் தொடருக்கான அனுமதி கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வழங்கப்படவில்லை.

புத்தம் புது தொடருடன் கிரிக்கெட்டை ஆரம்பிக்கும் தென்னாபிரிக்கா!

எனினும், தென்னாபிரிக்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் நதி எம்மெதத்வா, மீண்டும் பயிற்சிகள் மற்றும் விளையாடுவதற்கான அனுமதியை வழங்கிய நிலையில், எதிர்வரும் 18ம் திகதிக்கு போட்டி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை கிரிக்கெட் போட்டியானது, தென்னாபிரிக்காவில் கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு உதவும் முகமாக நடத்தப்படுவதுடன், இதில், பெறப்படும் நிதி நிவாரணத்துக்காக ஒதுக்கப்படவுள்ளது.

அணிக்கு தலா 12 ஓவர்கள் அடங்கிய வகையில் போட்டி நடத்தப்படுவதுடன், அணிகளின் தலைவர்களாக காகிஸோ ரபாடா, ஏபி.டி.வில்லியர்ஸ் மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர் செயற்படவுள்ளனர். அணிக்கு தலா 8 வீரர்கள் என்ற அடிப்படையில், ஒரு அணியானது இரண்டு எதிரணிகளுக்கு எதிராகவும் தலா 6 ஓவர்கள் துடுப்பெடுத்தாட வேண்டும். பந்துவீச்சாளர் தலா 3 ஓவர்களை வீச முடியும். 

போட்டியின் இரண்டாவது பாதியின் போது, முதற்பாதியில் அதிக ஓட்டங்களை பெற்ற வரிசையில் அணிகள் துடுப்பெடுத்தாட முடியும். அணியொன்று 7 விக்கெட்டுகளை இழந்த போதும், 8வது துடுப்பாட்ட வீரர் தனியொருவராக துடுப்பெடுத்தாட முடியும். அதேநேரம், முதல் பாதியில் ஒரு அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தால், இரண்டாவது பாதியில் ஆட்டமிழக்காத துடுப்பாட்ட வீரர் ஆட்டத்தை தொடர வேண்டும். இவ்வாறு, பல புதிய விடங்கள் இந்த கிரிக்கெட் போட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Video – இலங்கையில் கிரிக்கெட் லீக் நடைபெற வேண்டுமா? – Udana

போட்டித் தொடர் குறித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெக்கஸ் போல் குறிப்பிடுகையில், முன்னணி வீரர்களுடன் கிரிக்கெட் போட்டி ஒன்று ஆரம்பமாவதுடன், அதனை தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கின்றமை உற்சாகத்தை தருகிறது. 

அத்துடன், இந்த போட்டியானது நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினத்தில் நடைபெறுவது மிகப்பெரிய பெருமையாகும். குறித்த போட்டியில் கிடைக்கும் நிதி கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்படவுள்ளது. போட்டிக்கு இன்னும் 3 வாரங்கள் உள்ளன. எனவே, வீரர்கள் உபாதைகளை குறைத்துக்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்க  வேண்டியுள்ளது என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…