உசேன் போல்டின் பிரியாவிடை தொடரில் இலங்கை வீரர்கள் 4 பேர்

245

உலக மெய்வல்லுனர் அரங்கின் வருடாந்த திருவிழாவாகக் கருதப்படுகின்ற 16ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் இன்று லண்டனில் ஆரம்பமாகின்றன.

உலக மெய்வல்லுனர் அரங்கின் நட்சத்திர வீரர்களான 8 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலக மெய்வல்லுனர் தொடரில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் 11 தடவைகள் சம்பியனாகியவருமான ஜமைக்காவின் உசைன் போல்ட் மற்றும் 5,000 மற்றும் 10,000 மீற்றர் ஓட்டப் பந்தயங்களின் சம்பியனான இங்கிலாந்தின் மொ.பராஹ் ஆகியோரின் பிரியாவிடை தொடராகவும் இது அமையவுள்ளது.

இந்நிலையில், குறித்த போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் ஊடகவியலாளர்களை சந்தித்த போல்ட், தோற்கடிக்கப்படாமல் விடைபெறுவேன். இப்போதும் உலகின் அதிவேக மனிதன் நான்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது” என்று சூளுரைத்துள்ளார். இதன்படி போல்ட் களமிறங்கும் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச்சுற்று நாளை நள்ளிரவு 01.20 மணிக்கு (இலங்கை நேரப்படி) நடைபெறவுள்ளது.

உலக மெய்வல்லுனர் தொடருக்கு இலங்கையிலிருந்து 4 பேர் பங்கேற்பு

லண்டனில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள..

அத்துடன், நெடுந்தூர ஓட்டப்பந்தய வீரரான இங்கிலாந்தின் மொ. பாராஹ் 5,000 மீற்றர் மற்றும் 10,000 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியனாக வலம் வருகிறார். இம்முறை உலக மெய்வல்லுனர் தொடருடன் ஓய்வு பெற திட்டமிட்டிருக்கும் 34 வயதான மொ. பாராஹ்வுக்கு இது தான் கடைசி சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள், 2ஆவது தடவையாக லண்டனின் ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. இதில், 205 நாடுகளைச் சேர்ந்த 2,000 க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் 24 போட்டிப் பிரிவுகளில் பங்குபற்றவுள்ளளனர்.

1983ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இலங்கை இதுவரை ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தமாக இரண்டு பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இதில், 1997ஆம் ஆண்டு எதென்ஸில் நடைபெற்ற போட்டிகளில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் சுசந்திகா ஜயசிங்க வெள்ளிப் பதக்கத்தையும், 2007ஆம் ஆண்டு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சார்பாக மரதன் ஓட்ட வீரர்களான அநுராத இன்திரஜித் மற்றும் கீதானி ராஜசேகர ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.  

எனினும், இந்த முறை இலங்கையிலிருந்து 2 வீரர்களும், 2 வீராங்கனைகளும் கலந்துகொள்ளவுள்ளனர். உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 3ஆவது தடவையாகவும் பங்கேற்கும் வாய்ப்பை மரதன் ஓட்ட வீரர் அநுராத இந்திரஜித் குரே பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற அவர், 2 மணித்தியாலமும் 15.38 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள்

பஹாமாஸ், நசௌவ்வில் நிறைவுக்கு வந்த 6ஆவது பொதுநலவாய இளையோர்…

இந்நிலையில், உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அமெரிக்காவில் வசிக்கின்ற இலங்கை வீராங்கனையான ஹிருனி விஜேரத்ன பெற்றுக்கொண்டார். அமெரிக்காவில் கடந்த மே மாதம் நடைபெற்ற இயுஜினி திறந்த மரதன் போட்டியில் பங்குபற்றிய அவர், போட்டித்தூரத்தை 2 மணித்தியாலயங்கள் 43.31 செக்கன்களில் நிறைவு செய்தார். இதன்படி, இம்முறை உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியின் அடைவு மட்டத்தைவிட அதிகளவு நேரத்தைப் பதிவு செய்த ஹிருனி, இப்போட்டித் தொடருக்கு தகுதிபெற்ற முதல் இலங்கை வீராங்கனையாக பதிவானார்.

15 மற்றும் 10 கிலோமீற்றர் தூரங்களைக் கொண்ட அரை மரதன் போட்டிப் பிரிவில் இலங்கைக்கான சாதனையை தன்னகத்தே கொண்டுள்ள ஹிருனி, கடந்த வருடம் நடைபெற்ற றியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார்.  

இதன்படி, அநுராத இந்திரஜித் பங்கேற்கும் போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி  மாலை 3.55 மணிக்கும் (இலங்கை நேரப்படி), ஹிருனி பங்கேற்கவுள்ள போட்டி அதே தினத்தன்று இரவு 7.00 மணிக்கும் நடைபெறவுள்ளது.  

அத்துடன் இந்தியாவின் புவனேஸ்வரில் இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கைக்காக ஒரேயொரு தங்கப் பதக்கத்தினை வென்று கொடுத்த நிமாலி லியனாரச்சி (800 மீற்றர்) உலக மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தை பூர்த்தி செய்யாத போதிலும், ஆசியாவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதால் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டார். நிமாலியின் போட்டி 10ஆம் திகதி நள்ளிரவு 12.25க்கு (இலங்கை நேரப்படி) நடைபெறவுள்ளது.  

இதேவேளை, ஈட்டி எறிதல் வீரர் வருண லக்ஷான் தயாரத்ன குறித்த போட்டிக்கான உலக தரப்படுத்தலில் 29ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமையினால் முதல் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இறுதி நேரத்தில் பெற்றுக்கொண்டார். எனவே வருண லக்ஷான் பங்கேற்கவுள்ள போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு 1.20க்கு நடைபெறவுள்ளது.  

உலகின் அதிவேக வீரரான உசைன் போல்ட்டின் பிரியாவிடை தொடராக நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் சாதனைகளுக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்பது உண்மை.