டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த மார்னஸ் லபுஷேன்

168
AFP

ஐசிசி இன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்த நிலையில், டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று (22) வெளியிட்டது.

இதன்படி, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் (103 ஓட்டங்கள்) மற்றும் அரைச்சதம் (51 ஓட்டங்கள்) அடித்த அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் (912 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அத்துடன், டெஸ்ட் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த 9ஆவது வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட மார்னஸ் லபுஷேன், இதுவரை 20 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 2113 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 12 அரைச்சதங்கள் அடங்கும்.

இதில் ஆஷஸ் தொடர் ஆரம்பமாவதற்கு முன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அவர் 4-வது இடத்தில் இருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் (897 புள்ளிகள்) 2ஆவது இடத்துக்கு சறுக்கினார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் உப தலைவர் ஸ்டீவ் ஸ்மித் (884 புள்ளிகள்) 3ஆவது இடத்திலும், நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் (879 புள்ளிகள்) 4ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 754 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பட் கம்மின்ஸ் (904 புள்ளிகள்), இந்திய சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் (883 புள்ளிகள்), பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடி (822 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி (814 புள்ளிகள்) 4ஆவது இடத்துக்கு முன்னேற, காயம் காரணமாக 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடாத அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் (810 புள்ளிகள்) 5ஆவது இடத்துக்கு சரிந்துள்ளார்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, T20 போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் கடந்த வாரம் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் (805 புள்ளிகள்) அண்மையில் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி T20 போட்டியில் 79 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் இங்கிலாந்து வீரர் டாவிட் மலானுடன் (805 புள்ளிகள்) முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதேபோல, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான T20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற பாகிஸ்தான் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான மொஹமட் ரிஸ்வான் (798 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடத்தைப் பிடித்தைப் பிடித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<