இங்கிலாந்து – அவுஸ்திரேலிய ஒருநாள் தொடர் மூலம் அதிக வீரர்கள் முதல் பத்திற்குள் நுழைவு

151
ICC

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐ.சி.சி உலகக்கிண்ண சுப்பர் லீக் தொடரின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நேற்று (16) நிறைவுபெற்ற நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது மாற்றம் செய்யபட்ட புதிய ஒருநாள் சர்வதேச வீரர்களுக்கான தரவரிசையை இன்று (17) வெளியிட்டது. 

குறித்த ஒருநாள் சர்வதேச தொடரை ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. இன்று வெளியிடப்பட்ட ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதல் பத்து நிலைகளுக்குள் அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை விசேட அம்சமாகும். 

சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை

குறித்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகியவற்றில், குறிப்பாக இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியின் போது பெற்ற அரைச்சதத்துடன் தொடரில் 89 ஓட்டங்களையும், 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய கிறிஸ் வோக்ஸ் மூன்று நிலைகள் உயர்ந்து 281 தரவரிசை புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முஹம்மட் நபி முதலிடத்திலும், மூன்றாமிடத்தில் பாகிஸ்தானின் இமாட் வஸீமும் காணப்படுகின்றனர். 

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ், தொடரில் வீழ்த்திய 6 விக்கெட்டுகளுடன் மூன்று நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (675) நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு புதிய யோசனை கூறிய SLC

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஸ் ஹெஸில்வூட் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் முதல் முறையாக முதல் பத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் 654 தரவரிசை புள்ளிகளை பெற்று எட்டாமிடத்தில் காணப்படுகின்றார். மேலும் தொடரில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் 637 தரவரிசை புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் உடன் இணைந்து பத்தாமிடத்தில் காணப்படுகிறார். 

இதேவேளை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சாளர் அடம் ஸம்பா வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (601) 10 நிலைகள் உயர்ந்து 21ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் 722 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுவதுடன், இரண்டாமிடத்தில் ஜஸ்பிரிட் பும்றாவும் (719), மூன்றாமிடத்தில் ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மானும் (701) காணப்படுகின்றனர். 

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பெற்ற சதத்துடன், ஒரு அரைச்சதம் உள்ளடங்கலாக தொடரில் மொத்தமாக 196 ஓட்டங்களை குவித்து தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக திகழ்ந்த இங்கிலாந்து அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயர்ஸ்டோ மூன்று நிலைகள் உயர்ந்து மீண்டுமொரு முறை முதல் பத்திற்குள் நுழைந்துள்ளார். 

ஆப்கான் உள்ளூர் T20 போட்டியில் பந்துவீசிய அணி உரிமையாளர்

அவுஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் சதம் விளாசி தொடர் ஆட்ட நாயகன் விருது வென்ற கிளேன் மெக்ஸ்வெல் 5 நிலைகள் உயர்ந்து அயர்லாந்து வீரர் போல் ஸ்டேர்லிங்குடன் இணைந்து 647 தரவரிசை புள்ளிகளுடன் 26ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

மேலும் கிளேன் மெக்ஸ்வெல்லுடன் இணைந்து அபாரமாக 212 ஓட்ட இணைப்பாட்டத்திற்கு உதவி கன்னி ஒருநாள் சர்வதேச சதம் பெற்ற விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கெரி 11 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (628) 28ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இதேவேளை முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் சதமடித்த இங்கிலாந்தின் சேம் பில்லிங்ஸ் தொடரில் ஒரு சதம், ஒரு அரைச்சதத்துடன் மொத்தமாக 183 ஓட்டங்களை குவித்ததன் மூலம் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (415) 44 நிலைகள் உயர்ந்து 93ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லபுஷேன் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (509) 20 நிலைகள் உயர்ந்து 63ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 871 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். இரண்டாமிடத்தில் ரோஹிட் சர்மாவும், மூன்றாமிடத்தில் பாபர் அஸாமும் காணப்படுகின்றனர். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<