இலங்கையில் நடைபெறவிருந்த U19 உலகக்கிண்ணத்தில் மாற்றம்!

U-19 World Cup 2024

44

இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதின் கீழ் அணிகளுக்கான உலகக்கிண்ணத் தொடரை தென்னாபிரிக்காவுக்கு மாற்றுவதற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தீர்மானித்துள்ளது. 

இந்தியாவின் அஹமதாபாத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றுவரும் ஐசிசி நிர்வாகக்குழு சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

புதிய தலைவருடன் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸி.!

இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக தெரிவித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. 

அதன்படி இன்று நடைபெற்றுவரும் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிரான இடைக்கால தடை மற்றும் 19 வயதின் கீழ் அணிகளுக்கான உலகக்கிண்ணம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு வந்தது. 

எனவே இந்த சந்திப்பின் படி இலங்கையில் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணத் தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதேவேளை இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை நீக்கப்படாது என இன்று நடைபெற்ற ஐசிசி நிர்வாகக்குழு சந்திப்பில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும்  இலங்கை அணி அடுத்துவரும் 19 வயதின் கீழ் உலகக்கிண்ணம் உட்பட சர்வதேச தொடர்கள் மற்றும் இருதரப்பு தொடர்களில் எந்தவித தடையும் இன்றி விளையாட முடியும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐசிசியால் வழங்கப்படும் நிதிகளில் எந்தவித இடையூறும் இருக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே இலங்கை 19 வயதின் கீழ் அணி தென்னாபிரிக்கா சென்று உலகக்கிண்ணத்தில் பங்கேற்க முடியும் என்பதுடன், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை – ஜிம்பாப்வே தொடர் ஏற்கனவே திட்டமிட்டது போன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<