எமது பந்துவீச்சாளர்கள் திட்டங்களை சரியாக செயற்படுத்தவில்லை – தசுன்

ICC T20 World Cup 2022

189

நமீபியாவிற்கு எதிரான மோசமான தோல்விக்கு தமது பந்துவீச்சாளர்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமையே பிரதான காரணம் என குறிப்பிட்டுள்ள இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக, முன் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தைப் பெறவில்லை என்றும், பவர்ப்ளே ஓவரில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என தெரிவித்தார்.

மெல்பர்ன் ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று (16) நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுக்கான ஆரம்பப் போட்டியில் ஆசிய சம்பியனும் முன்னாள் உலக சம்பியனுமான இலங்கையை 55 ஓட்டங்களால் வீழ்த்தி நமீபிய அணி வரலாறு படைத்தது.

இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய 2 போட்டிகளில் இலங்கை அணி மிகப் பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் அல்லது அதிக நிகர ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

>> T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கைக்கு அதிர்ச்சி தோல்வி

இந்த நிலையில், நமீபிய அணியுடனான மோசமான தோல்வி குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானாக, பந்துவீச்சில் பிரகாசிக்கத் தவறியதே தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில்,

ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, நாங்கள் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு பந்துவீச தவறிவிட்டோம். சரியான முறையில் நாங்கள் பந்துவீசவில்லை, இது கவலையளிக்க கூடிய விடயம். பவர்ப்ளே ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டால் போட்டியும் நம் கையை விட்டு சென்றுவிட்டது என்றே அர்த்தம். இந்தப் போட்டியில் நாங்கள் ஒரு விடயத்தைக் கூட சிறப்பாக செய்யவில்லை. நாங்கள் நல்ல அணியாக இருந்தாலும், இந்தப் போட்டி எங்களுக்கு மோசமானதாக மாறிவிட்டது. 160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு விளையாடும் பொழுது முதல் 3 வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியம், அதை எங்கள் வீரர்கள் இந்தப் போட்டியில் சரியாக செய்யவில்லை என்று தெரிவித்தார்.

அதேபோன்று, எதிரணியின் ஆறாவது விக்கெட் வீழ்த்தப்பட்ட பிறகு, நாங்கள் செய்திருக்க வேண்டியது அடுத்த விக்கெட்டைப் பெற முயற்சிப்பதாகும். எமது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க பந்து வீசவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சில போட்டிகளில் மாத்திரம் தான் விளையாடியுள்ளனர், எனவே முதல் துடுப்பெடுத்தாடுவதை விட விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதி இதுதான் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக பௌண்டரிகளை அடிக்க நாங்கள் நிறைய மோசமான பந்துகளைக் கொடுத்தோம் என்று நினைக்கிறேன். இதை விட நாங்கள் ஒரு சிறந்த அணி என்று நினைக்கிறேன், குறிப்பாக பந்துவீச்சுக்கு வரும்போது. அவர்களின் பந்துவீச்சைப் பார்த்தால், அவர்கள் உண்மையிலேயே நல்ல பகுதிகளில் பந்து வீசினர், ஆனால் எமது பந்து வீச்சாளர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர்.

நாணய சுழற்சியை வெல்வது அவர்களது எதிர்பார்ப்பாக இருந்தாலும், நாங்கள் நிறைய ஓட்டங்களைக் கொடுத்து விட்டோம். எனவே வெற்றி இலக்கை துரத்தும் போது நம்பிக்கையுடன் நாங்கள் களமிறங்கியிருக்க வேண்டும். குறிப்பாக நமீபிய அணியின் அண்மைக்கால வெற்றிகள் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி பெற்றுக் கொண்ட வெற்றிகளாக அமைந்திருந்தன. இருப்பினும், பவர் ப்ளேயில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இலங்கைக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்திருந்தது.

இது கடினமான ஓட்ட எண்ணிக்கை அல்ல. நான் முன்பு குறிப்பிட்டது போல, பவர் ப்ளேயில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததன் பிறகு மீண்டு வருவது மிகவும் கடினம். நாங்கள் கடந்த காலங்களில் அவ்வாறு செய்துள்ளோம், எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் அவர்கள் சிறந்த முறையில் பந்து வீசியிருந்தார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நமீபியாவிடம் இலங்கை அணி தோல்வியைத் தழுவியதால் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் இலங்கை அணி அதிக நிகர ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் நமீபிய அணி குறித்த பிரிவில் முதலிடம் பிடிக்கும்.

>> சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெறுவதில் சிக்கலை சந்தித்துள்ள இலங்கை!

இதனால் இலங்கை அணி 2ஆவது இடம்பிடித்து, சுபர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ள B குழுவில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் ஒரு தடவை ஆசிய அணிகள் மோதுகின்ற மினி ஆசியக் கிண்ணத் தொடரொன்றை இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் பார்க்கின்ற வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும்.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<