அவுஸ்திரேலியா அணியில் மூவர் காயங்களால் அவதி

ICC T20 World Cup 2022

1559

அவுஸ்திரேலியா அணி இன்று (04) ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தீர்மானமிக்க கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ள நிலையில். அந்த அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச், சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் டிம் டேவிட் ஆகிய மூவரும் காயங்களுக்கு முகங்கொடுத்திருப்பது மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது.

T20 உலகக் கிண்ணத் தொடரில் அடிலெய்டில் இன்று நடைபெறவுள்ள சுபர் 12 சுற்றுப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, தனது கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

குழு 1 இல் இடம்பிடித்துள்ள அவுஸ்திரேலியா அணி, 5 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. இதனால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. அதனை செய்தாலும் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்குரிய கடைசி லீக் போட்டியின் முடிவை பொறுத்தே அவுஸ்திரேலியாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும். குறிப்பாக நியூசிலாந்து அணி, அயர்லாந்திடம் வீழ்ந்தால் அவுஸ்திரேலியாவுக்கு சிக்கல் தீரும்.

இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிராக இறுதியாக நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச், டிம் டேவிட் ஆகியோர் தசைப்பிடிப்பு காயம் அடைந்தனர். இதனால் அவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதனிடையே, ‘உடல் தகுதி பரிசோதனையின் போது ஒரு சதவீதம் திருப்தியில்லை என்றால் கூட விளையாடமாட்டேன். இருப்பினும் நான் விளையாடுவதற்கு 70 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்’ என்று ஆரோன் பிஞ்ச் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். ஒருவேளை, பிஞ்ச் ஆடாவிட்டால் மெத்யூ வேட் தலைவர் பணியை கவனிப்பார்.

இந்த நிலையில், டிம் டேவிட் மற்றும் சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் தொடை தசைப்பிடிப்பு காயங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எவ்வாறாயினும், குறித்த 2 வீரர்களும் இன்று நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவார்கள் என்ற விடயத்தை ஆரோன் பிஞ்ச் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், டிம் டேவிட் இன்றைய போட்டியில் விளையாடாவிட்டால் அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா மற்றும் விக்கெட் காப்பாளர் மெத்யூ வேட் ஆகிய இருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டாலும் பிறகு அணியில் இடம்பிடித்துள்ள விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<