LPL போட்டிகளில் ஒழுங்கீனமாக நடந்த வீரர்களுக்கு அபராதம்

210

கடந்த சனிக்கிழமை (05) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டி ஒன்றில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்ட கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் தம்புள்ள ஓரா அணிகளின் வீரர்களுக்கு அபராதம் வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) குறிப்பிட்டிருக்கின்றது.

>> ஹஸன் அலியின் வேகத்துடன் ஜப்னாவை வீழ்த்திய தம்புள்ள ஓரா

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் தம்புள்ளை ஓரா அணிகள் இடையிலான போட்டியில் மோசமான நடத்தையை வெளிக்காட்டிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீரர் சாமிக்க கருணாரட்ன LPL விதிமுறைகள் சரத்து 2.6 இணை மீறியதன் அடிப்படையில் குற்றவாளியாக இனம் காணப்பட்டிருப்பதோடு, தனது போட்டிக் கட்டணத்தில் 30% வீதத்தினை அபராதமாக செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

அதோடு, அவருக்கு LPL நன்னடத்தை வீதிமிறல் புள்ளிகள் 02 உம் வழங்கப்பட்டிருக்கின்றது. மறுமுனையில் சாமிக்க மற்றுமொரு பிரிவிலும் குற்றம் (2.1) இழைத்ததாக சுட்டிக்காட்டப்பட்டு அதில் அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பிரிவில் நன்னடத்தை வீதிமிறல் புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம், தம்புள்ளை ஓரா அணியின் தலைவர் குசல் மெண்டிஸிற்கு போட்டிக் கட்டணத்தில் 10% அபராதமாக வழங்கப்பட்டிருப்பதோடு, அவருக்கும் நன்னடத்தை வீதிமிறல் புள்ளி ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

தம்புள்ளை ஓரா மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் இடையிலான போட்டியில் சாமிக்க கருணாரட்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தது அவதானிக்கப்பட்டிருந்ததோடு, இந்த வாக்குவாதத்திற்காகவே வீரர்களுக்கு அபராதமும் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம், குறித்த போட்டியில் போட்டி நடுவருடன் வாக்குவாதம் செய்த தம்புள்ளை ஓரா அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹஸன் அலியும் அபராதத்தினை பெற்றிருக்கின்றார். அவருக்கு தற்போது போட்டிக் கட்டணத்தில் 15% இனை அபராதமாக விதிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதோடு, நன்னடத்தை விதிமீறல் புள்ளி ஒன்றையும் பெற்றிருக்கின்றார்.

>> பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் ஆடுவது தொடர்பில் ஆலோசனைக் கூட்டம்

இதேநேரம், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி கடந்த மாதம் 30ஆம் திகதி ஜப்னா கிங்ஸ் அணியுடன் ஆடியிருந்த போட்டியில் ஒழுக்கவிதிகளை மீறிநடந்த பாகிஸ்தான் வீரர் நஸீம் சாஹ்வும் அபராதத்தினைப் பெற்றிருக்கின்றார். நஸீம் சாஹ் ஜப்னா கிங்ஸ் அணி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டமிழந்த போது நடந்து கொண்ட விதத்திற்காக அபராதத்தினைப் பெற்றிருப்பதோடு, நஸீம் சாஹ் குறித்த போட்டிக்காக வழங்கப்பட்ட கட்டணத்தில் 20% இனை அபராதமாக செலுத்த பணிக்கப்பட்டுள்ளதோடு, நன்னடத்தை வீதிமிறல் புள்ளி ஒன்றும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<