ஜூன் மாத சிறந்த வீரர்கள் பரிந்துரையில் வனிந்து 

102

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) ஜூன் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கான பரிந்துரையில் இடம்பெற்ற வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கின்றது.

>>அயர்லாந்து அணித் தலைமையில் அதிரடி மாற்றம்

இதன்படி வெளியிடப்பட்டிருக்கும் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பரிந்துரைப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்க இடம்பெற்றிருக்கின்றார்.

தற்போது ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்றுவருகின்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் பங்கேற்று வருகின்ற வனிந்து ஹஸரங்க தொடரில் அதிக விக்கெட்டுக்களைச் (20) சாய்த்த வீரராக காணப்படுவதோடு, ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் முதல் தடவையாக ஐந்து விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் சாய்த்த சுழல் வீரராகவும் குறித்த போட்டித் தொடரின் மூலம் உலக சாதனை நிலைநாட்டியிருந்தார்.

இதேநேரம் வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சு இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற உதவியிருப்பதோடு அவர் ஐ.சி.சி. இன் ஜூன் மாதத்திற்குரிய சிறந்த கிரிக்கெட் வீரர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவும் காரணமாக அமைந்திருக்கின்றது.

மறுமுனையில  ஐ.சி.சி. இன் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜிம்பாப்வே அணியின் சகலதுறைவீரர் சோன் வில்லியம்ஸ், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ட்ராவிஸ் ஹெட் ஆகியோரும் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்த வீரர்களில் சோன் வில்லியம்ஸ் நடைபெற்று வருகின்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறியதும், ஜிம்பாப்வே அணிக்காக தொடர்ச்சியாக சதங்களை விளாசியதும் அவர் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இடம்பெற்றதற்கான காரணங்களாக அமைகின்றன.

>>ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றியுடன் உலகக் கிண்ண தொடரில் இலங்கை

இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ட்ராவிஸ் ஹெட் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்பவற்றில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியமைக்காக சிறந்த வீரர் பரிந்துரையில் இடம்பெற்றிருக்கின்றார். ட்ராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 174 ஓட்டங்களுக்கு 163 ஓட்டங்கள் பெற்றது அவரது தரப்பு சம்பியன் பட்டத்தினை வெல்வதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது.

அதேவேளை, கிரிக்கெட் இரசிகர்கள் ஜூன் மாதத்திற்குரிய சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான வாக்கினை கீழ்வரும் இணைப்பின் மூலமாக வழங்க முடியும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

>>சிறந்த வீரருக்காக உங்கள் வாக்குகளை வழங்க<<

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<