ICC இன் தலைமை நிர்வாக அதிகாரியானார் ஜெப் அலார்டிஸ்

118
Getty Image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெப் அலார்டைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்த மனு சவ்னி, ஐசிசியின் ஒழுக்காற்று விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக அப்பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஜெப் அலார்டைஸ்., ஐசிசியின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் ஜெப் அலார்டிஸை ஐசிசியின் நிரந்தர தலைமை நிர்வாக அதிகரியாக நியமிப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகப்பூர்வமாக நேற்று (21) அறிவித்துள்ளது.

>>ICC கிரிக்கெட் குழுவின் தலைவரானார் சௌரவ் கங்குலி

இதுகுறித்து ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரியாக நிரந்தரமாக பதவி ஏற்க ஜெப் ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அண்மையில் நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ணத் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் அவர் மிகப்பெரும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார்.

ஜெப் உலகளாவிய கிரிக்கெட் மற்றும் அதன் பங்குதாரர்களை பற்றிய அறிவைக் கொண்டுள்ளார். மேலும் அடுத்த தசாப்தத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த எங்கள் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சரியான நபர் தாம் தான் என்பதை தொடர்ந்து நிரூபித்துள்ளார்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐசிசியின் நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜெப் அலார்டிஸ் கருத்து தெரிவிக்கையில்,

கிரிக்கெட் விளையாட்டுக்கு சரியானதைச் செய்வதிலும், நீண்ட கால வெற்றி மற்றும் நிலைத்தன்மையை வழங்க உறுப்பினர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதிலும் எனது தொடர்ச்சியான கவனம் இருக்கும். கடந்த எட்டு மாதங்களில் ஐசிசி ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், இதுபோன்ற திறமையான அணியுடன் கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான ஜெப் அலார்டிஸ், அந்நாட்டின் கழக மட்டப் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார். இரசாயன பொறியியலில் பட்டம் பெற்றவராவார். இதற்கு முன்பு ஐசிசிசியின் பொது முகாமையாளராக (கிரிக்கெட்) எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

அத்துடன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேம்ஸ் சதர்லேண்டின் பல்கலைக்கழக நண்பரான இவர், 2000ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி நடுவர்கள் சங்கத்தின் முகாமையாளராக அலார்டிஸை நியமித்தார். அத்துடன், 2012இல் ஐசிசிக்கு செல்வதற்கு முன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் செயல்பாட்டு பொது முகாமையாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<