இலகு வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய பங்களாதேஷ்

124

சௌம்யா சர்கர் மற்றும் தமீம் இக்பாலின் அரைச்சதங்கள் மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

சில்ஹெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (14) பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களையே பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு தமீம் இக்பால் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களை பெற்றதோடு சௌம்யா சர்கர் 81 பந்துகளில் 80 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் பங்களாதேஷ் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 202 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

>>மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20 குழாமை அறிவித்தது பங்களாதேஷ்

ஷாய் ஹோப் மேற்கிந்திய தீவுகள் சார்பில் துடுப்பாட்டத்தில் தனித்து போராடி இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பெற்றபோதும் அந்த அணி சார்பில் வேறு எந்த வீரரும் சோபிக்கவில்லை.

கடந்த போட்டியில் 144 பந்துகளில் ஆட்டமிழக்காது 146 ஓட்டங்களை பெற்ற நிலையில் தொடர்ந்து 131 பந்துகளில் 108 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் இந்த தொடரில் அதிகபட்சம் 297 ஓட்டங்களை குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் வேறு எந்த வீரரும் துடுப்பாட்டத்தில் 20 ஓட்டங்களைக் கூட எட்டவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையை சாய்த்த மஹ்தி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்து போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

பங்களாதேஷ் அணிக்காக சௌம்யா சர்கர் மற்றும் தமீம் இக்பால் இரண்டாவது விக்கெட்டுக்கு பெற்ற 131 ஓட்ட இணைப்பாட்டம் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 198/9 (50) – ஷாய் ஹோப் 108*, மார்லன் சாமுவேல்ஸ் 19, மஹிதி ஹசன் மிராஸ் 4/29, மஷ்ரபி மொர்டசா 2/34, ஷகீப் அல் ஹஸன் 2/40

பங்களாதேஷ் – 202/2 (38.3) – தமீம் இக்பால் 81*, சௌம்யா சர்கர் 80, மார்லன் சாமுவேல்ஸ் 2/38

முடிவு – பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<