T20 உலகக் கிண்ண நடுவர் குழாத்தில் இரண்டு இலங்கையர்

ICC T20 World Cup 2022

727

அவுஸ்திரேலியாவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையின் குமார் தர்மசேன கள நடுவராகவும், மற்றுமொரு இலங்கையரான ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராகவும் கடமை புரியவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் மற்றும் சுபர் 12 சுற்றுகளுக்கான போட்டி அதிகாரிகளை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி பெயரிட்டுள்ள 20 பேர் கொண்ட அதிகாரிகளின் பட்டியலில், 16 நடுவர்கள் மற்றும் 4 போட்டி மத்தியஸ்தர்கள் இடம்பெற்றுள்ளனர்.

45 போட்டிகள் கொண்ட இம்முறை போட்டித் தொடரில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல பிரதான போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளார். ஐசிசி இன் போட்டி மத்தியர்கள் குழுவின் பிரதானியான இவர் 8ஆவது தடவையாக T20 உலகக் கிண்ணத்தில் போட்டி மத்தியஸ்தராக பணிபுரியவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இவருடன், ஜிம்பாப்வேயின் அண்ட்ரூ பைக்ரொப்ட், இங்கிலாந்தின் கிறிஸ் ப்ரோட் மற்றும் அவுஸ்திரேலியாவின் டேவிட் பூன் ஆகிய மூவரும் இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் போட்டி மத்தியஸ்தர்களாக பணியாற்றவுள்ளனர்.

இதனிடையே, 16 பேர் கொண்ட கள நடுவர்கள் குழாத்தில் இலங்கையின் குமார் தர்மசேன இடம்பெற்றுள்ளார். ஐசிசி இன் முன்னணி கள நடுவர்களில் ஒருவராக வலம் வருகின்ற குமார் தர்மசேன, ஏழாவது தடவையாக T20 உலகக் கிண்ணத் தொடரில் கள நடுவராக பணியாற்றவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதேபோல, பாகிஸ்தானின் அலிம் தார், தென்னாபிரிக்காவின் மரைஸ் எரஸ்மஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் ரொட் டக்கர் ஆகியோர்

தங்களுடைய ஏழாவது T20 உலகக் கிண்ணத்தில் நடுவர்களாக பணியாற்றவுள்ளனர்.

இதனிடையே, இம்மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதல் சுற்றுக்கான முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் நமீபியர அணிகள் மோதவுள்ளன. இதில் போட்டியின் கள நடுவர்களாக ரொட் டக்கர் மற்றும் ஜோயல் வில்சன் ஆகியோர் செயல்பட, மூன்றாவது நடுவராக போல் ரீபெலும், நான்காவது நடுவராக மரைஸ் எரஸ்மஸும் பணியாற்றவுள்ளனர். அத்துடன், ஜிம்பாப்வேயின் அண்ட்ரூ பைக்ரொப்ட் போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளார்.

அதேபோல, இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுபர் 12 சுற்றுக்கான முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியின் கள நடுவர்களாக குமார் தர்மசேன மற்றும் ஏட்ரியன் ஹோல்ட்ஸ்டொக் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

போட்டி அதிகாரிகள் முதல் சுற்று மற்றும் சுப்பர் 12 சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான அதிகாரிகள் விரைவில் அறிவிக்கப்படுவர் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரானது நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் நவம்பர் 9, 10ஆம் திகதிகளில் அரையிறுதி போட்டிகள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் திகதி மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டி மத்தியஸ்தர்கள்

ரஞ்சன் மடுகல்ல, டேவிட் பூன், அண்ட்ரூ பைக்ரொப்ட், கிறிஸ் ப்ரோட்

நடுவர்கள்

அட்ரியன் ஹோல்ட்ஸ்டொக், அலீம் தார், அஹ்ஸன் ராஸா, கிறிஸ்டோபர் பிரௌன், கிறிஸ்டோபர் கெப்பனி, ஜோயல் வில்சன், குமார் தர்மசேன, லேங்டன் ருசர், மரைஸ் எராஸ்மஸ், மைக்கல் கவ், நிதின் மேனன், போல்

ரீபெல், போல் வில்சன், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பாரோ, ரொட் டக்கர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<