வர்த்தக நிறுவன வலைப்பந்து தொடரில் சம்பியனாக HNB வங்கி

497

A பிரிவு வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான இந்த ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் CDB பினான்ஸ் அணியை வீழ்த்திய ஹட்டன் நஷனல் வங்கி (HNB), தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும்  சம்பியன் பட்டத்தினை சூடிக்கொண்டது.

அண்மையில் டொரிங்டன் மைதானத்தில் முடிவடைந்த தொடரின் இறுதிப் போட்டியில், நட்சத்திர வீராங்கனைகளைக் கொண்ட ஹட்டன் நஷனல் வங்கி, CDB பினான்ஸ் அணியினை 63-44 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியே அடுத்தடுத்த சம்பியன் பட்டங்களை சுவீகரித்திருக்கின்றது.

தேசிய அணி வீராங்கனைகளுடன் மோதிய யாழ் வலைப்பந்து அணிக்கு 2ஆம் இடம்

தீர்மானமிக்க இறுதிப் போட்டியின் முதல் காற்பாதியில் CDB பினான்ஸ் அணியை விட 6 புள்ளிகளை அதிகமாக பெற்றது ஹட்டன் நஷனல் வங்கி. தொடர்ந்து இரண்டாவது காற்பாதியில் இன்னும் 11 புள்ளிகளை ஹட்டன் நஷனல் வங்கி பெற ஆட்டத்தின் முதல் பாதி, 32-21 என ஹட்டன் நஷனல் வங்கியின் ஆதிக்கத்துடன்  முடிவடைந்தது.

மூன்றாம் காற்பாதி, 45-32 என்ற புள்ளிகள் அடிப்படையில் மீண்டும் ஹட்டன் நஷனல் வங்கியின் ஆதிக்கத்துடனேயே முடிவடைந்தது. அதோடு இறுதி காற்பாதியில் மேலதிகமாக 18 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட ஹட்டன் நஷனல் வங்கி அணி தொடரின் சம்பியன்களாக மாறினர். இறுதி காற்பாதியில் CDB பினான்ஸ் அணி 10 புள்ளிகளை மாத்திரம் பெற்று 19 புள்ளிகள் வித்தியாசத்தில் (63-44) HNB அணியிடம் தோல்வியடைந்தது.

இந்த ஆண்டுக்கான வர்த்தக வலைப்பந்தாட்ட தொடரில், மூன்றாம் இடத்தினை எக்ஸ்போ லங்கா அணியினர் பெற்றுக் கொண்டனர்.

கடந்த ஆண்டுக்கான வர்த்தக நிறுவன வலைப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் செலான் வங்கியினை, ஹட்டன் நஷனல் வங்கி 51-46 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்திருந்தது. எனினும் இந்த ஆண்டுக்கான தொடரில் செலான் வங்கி பங்குபற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, B பிரிவு வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட தொடரில் சம்பத் வங்கியினை 20-17 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய ஒமேகா லைன் நிறுவனமும், C பிரிவுக்கான தொடரில் பெயார்பெர்ஸ்ட் காப்புறுதி (Fairfirst Insurance) அணியினை வீழ்த்திய எக்ஸஸ் குழும (Access Group) நிறுவனமும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்திருக்கின்றன.   

பொதுநலவாய விளையாட்டில் தேசிய கொடியை ஏந்தும் பளுதூக்கல் வீரர்!

அவுஸ்திரேலியாவின் கோல்ட்…

இதுதவிர, B பிரிவுக்கான தொடரில் மூன்றாம் இடத்தினை சிங்கர் நிறுவனமும், C பிரிவுக்கான தொடரில் மூன்றாம் இடத்தினை கொமர்ஷல் லீசிங் அணியும் பெற்றிருகின்றன.

மேலும், தொடரின் பிளேட் சம்பியன்களாக மாஸ் எக்டிவ் அணி நாமம் சூடியதுடன் ஆண்கள், பெண்கள் இணைந்து விளையாடும் கலப்பு பிரிவு தொடரில் HNB அணியினை 22-18 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய CDB பினான்ஸ் அணி சம்பியன்களாக மாறியிருந்தது. கலப்பு பிரிவில் மூன்றாம் இடத்தினை எல்.பி பினான்ஸ் அணி பெற்றிருந்தது.  

விருதுகள்

  • வலைப்பந்தாட்ட ராணி விருது – T. அபிதா (CBD பினான்ஸ்)
  • வலைப்பந்து மைதான மங்கை விருது – கயான்ஜலி அமரவீர (HNB)
  • சிறந்த இலக்கு வீராங்கனை – சத்துரங்கனி மால்கந்தி (எக்ஸ்போ லங்கா)
  • சிறந்த தடுப்பு வீராங்கனை – அஞ்சலி ஏக்கநாயக்க (HNB)
  • சிறந்த ஆண் வீரர் – தனுக்க ரத்நாயக்க (CDB பினான்ஸ்)
  • வளர்ந்துவரும் வீராங்கனை – ஜெஸ்ஸிக்கா சில்வா (எக்ஸஸ் குழுமம்)
  • ஒற்றுமைக்கான அணி – பெயார்பெர்ஸ்ட் காப்புறுதி நிறுவனம்
  • சிறந்த உடைக்கான விருது – பிராண்டிக்ஸ் (Brandix)