சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் க்ளாசென்

Heinrich Klaasen Retirement

19
Heinrich Klaasen Retirement

தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஹென்றிச் க்ளாசென் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (02) அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இந்த நிலையில், தனது ஓய்வு குறித்து ஹென்ரிச் க்ளாசென் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள் எனக்கு ஒரு சோகமான நாளாகும். எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிர்காலத்தில் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு நீண்ட நேரம் எடுத்தது. இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால், அதே நேரத்தில் நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

முதல் நாளிலிருந்தே, என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். எனது சிறுவயது முதல் கனவு கண்ட அனைத்தும் அதுதான். என் மார்பில் Proteas இலச்சினையுடன் விளையாடியது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக இருந்தது, எப்போதும் இருக்கும். இந்த முடிவு எனக்கு வாய்ப்பளிப்பதால், எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் சிறந்த நண்பர்களையும் உறவுகளையும் நான் பெற்றுள்ளேன். தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடுவது என் வாழ்க்கையை மாற்றிய சிறந்த மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எப்போதும் தென்னாப்பிரிக்கா அணியின் பெரிய ஆதரவாளராக இருப்பேன். மேலும், என்னையும் எனது அணியினரையும் ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று கூறிவுள்ளார்.

ஹென்றிச் க்ளாசென் கடைசியாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடினார். எவ்வாறாயினும், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சபை அண்மையில் வெளியிட்ட இந்த ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்த சூழலில் தற்போது அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் T20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாட உள்ளார்.

தற்போது 33 வயதாகும் ஹென்ரிச் க்ளாசென் 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.இதில் அவர் தனது அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் 104 ஓட்டங்களையும், 60 ஒருநாள் போட்டிகளில் 2141 ஓட்டங்களையும், 58 T20i போட்டிகளில் 1000 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

மேலும், ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் க்ளாசன், 48 போட்டிகளில் 2 சதங்கள், 7 அரைச் சதங்கள் உட்பட 1,480 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

எனவே, தற்போதைய தென்னாப்பிரிக்கா அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவராக இருக்கும் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிவுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல, அதிரடியால் எதிரணியை திணறடிப்பதற்கு பெயர்போன ஹென்ரிச் க்ளாசென், 34 வயதில் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<