ஜிம்பாப்வேயை வீழ்த்தி கிரிக்கெட் உலகில் முதல் வெற்றியை பதிவு செய்த சிங்கப்பூர்

61
Image Courtesy : Twitter

சர்வதேச டி20 போட்டிகளில் ஐ.சி.சி இன் முழு நேர உருப்பு நாடான ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய சிங்கப்பூர் கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. அந்த நாட்டின் கிரிக்கெட் வரலாற்றில் இது முக்கிய மைல்கல் சாதனையாகவும் இந்த வெற்றி பதிவாகியது. 

சிங்கப்பூரில் ஜிம்பாப்வே, சிங்கப்பூர், நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

சேஸிங்கில் சதமடித்து நேபாள தலைவர் பரஸ் கட்கா புதிய சாதனை

சர்வதேச இருபதுக்கு 20 (T20i) போட்டிகளில் பதிலுக்கு….

இதில் நேற்று (29)  நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிங்கப்பூர் – ஜிம்பாப்வே அணிகள் மோதியதுடன், மழையால் போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிங்கப்பூர் அணிக்கு ரொஹான் ரங்கராஜன் மற்றும் சுரேந்திரன் சந்திரமோகன் ஜோடி அசத்தல் ஆரம்பத்தைக் கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்காக 62 ஓட்டங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர்.

தொடர்ந்து வந்த வீரர்களும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ஓட்டங்களைக் குவித்தது. 

அந்த அணிக்காக எந்தவொரு வீரரும் அரைச் சதம் அடிக்காத போதிலும், மன்ப்ரீத் சிங் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் முறையே 41 ஓட்டங்களையும், ரோகன் 39 ஓட்டங்களையும், சந்திரமோகன் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். 

பந்துவீச்சில் ஜிம்பாப்வே அணியின் ரையன் பேர்ல் 3 விக்கெட்டுக்களையும், றிச்சர்ட் எங்கராவா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

கடினமான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரெஜிஸ் சகப்வா 19 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்து மிரட்டினார். தொடர்ந்து வந்த சோன் வில்லியம்ஸ் 66 ஓட்டங்களையும், முட்டோம்போட்ஸி 32 ஓட்டங்களையும் எடுத்து நம்பிக்கை கொடுத்தனர். 

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின் ஜிம்பாப்வே அணி தடுமாறத் தொடங்கியது. போட்டியின் 16ஆவது ஓவர் முதல் விக்கெட் வீழ்த்தப்பட போட்டி கடைசி ஓவர் வரை சென்றது.

இதன்படி, கடைசி ஓவரில் 10 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், ஜானக் பிரகாஷ் அபாரமாக பந்து வீசி ஐந்து ஓட்டங்களை மட்டுமே கொடுத்தார். இதனால் சிங்கப்பூர் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே அணியால் 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது. பந்துவீச்சில் சிங்கப்பூர் அணியின் அம்ஜாத் மஹ்மூத் மற்றும் ஜனக் பிரகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

Image Courtesy : Twitter

இந்த வெற்றியின் மூலம் டி20 போட்டிகளில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஐ.சி.சி இன் இணை உருப்பு நாடான சிங்கப்பூர் அணி வரலாற்றில் முதன் முறையாக ஐ.சி.சி இன் முழு நேர உருப்பினர் நாடு ஒன்றை வீழ்த்தி சாதனை படைத்தது. 

அத்துடன், சிங்கப்பூர் அணியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு இந்திய வம்சாவளி வீரர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அதிலும், தமிழ் பேசுகின்ற வீரர்களான ரொஹான் ரங்கராஜன், சுரேந்திரன் சந்திரமோகன், செல்லதுரை விஜயகுமார், பாஸ்கரன் உள்ளிட்ட வீரர்கள் சிங்கப்பூர் அணிக்காக விளையாடியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இலங்கையுடனான T20 தொடரில் அஸ்டன் டேர்னர் ஆடுவதில் சந்தேகம்

தற்போது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்…….

இது இவ்வாறிருக்க, சிங்கப்பூர் அணியின் தலைவராக செயற்படுகின்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 38 வயதான அம்ஜாத் மஹ்மூத் வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையில், 

உண்மையில் இந்த வரலாற்று வெற்றி குறித்து பெருமைப்படுகிறேன். ஜிம்பாப்வே மிகவும் பலமிக்க அணியாகும். எனினும், எனது அணி வீரர்களுக்கு பயப்பட வேண்டாம் எனவும், தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்துங்கள் எனவும் சொன்னேன். இளம் வீரர்களைக் கொண்ட அணியாக நாங்கள் இருந்தாலும், ஒரு டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற அணியொன்றை வீழ்த்த கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டார். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்ற தென் கிழக்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான டி20 போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிங்கப்பூர் அணி, அடுத்த மாதம் டுபாயில் நடைபெறவுள்ள 2020 டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<