எவரெடி கிண்ண இறுதிப்போட்டிக்கு ஒலிம்பிக், வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகங்கள்

175

எவரெடி கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் நேற்றிரவு (21) நடைபெற்றஇரண்டு அரையிறுதிப் போட்டிகளிலும் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் மற்றும் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் என்பன வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

1ஆவது அரையிறுதி – மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் எதிர் டிஸ்கோ விளையாட்டுக் கழகம்

முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது. இதில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணியும், டிஸ்கோ விளையாட்டுக் கழக அணியும் மோதிக்கொண்டன.

போட்டி ஆரம்பித்து 10ஆவது நிமிடத்தில் ஒலிம்பிக் அணிக்கு கோல் போடும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. பெனால்டி எல்லைப் பகுதியில் முன்கள வீரா் ஹனான் பரிமாறிய பந்தை பெற்றுக் கொண்ட ஒலிம்பிக் அணியின் முன்கள வீரா் எம்.எம்.ஜரீத் கோல் கம்பத்தை நோக்கி வேகமாக அடித்தபோது பந்து கம்பத்தின் மேலால் சென்றது.

போட்டியின் 18ஆவது நிமிடத்தில் ஒலிம்பிக் வீரா் சாமில் பெனால்டி எல்லைக்குள் பந்தை எடுத்து வரும்போது டிஸ்கோ அணி வீரா் வின்சன் முறையற்ற விதத்தில் செயற்பட்டதால் நடுவர் சி.எம்.அஸ்கர் ஒலிம்பிக் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். முன்கள வீரா் பயாஸ் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்து ஒலிம்பிக் அணியை 1-0 கோல் அடிப்படையில் முன்னிலைக்கு இட்டுச் சென்றார்.

போட்டியின் 25ஆவது நிமிடத்தில் டிஸ்கோ அணி வீரா் ரஜீவன் ஒலிம்பிக் வீரா்கள் இருவரைத் தாண்டி பந்தை ரூபராஜூக்கு பரிமாறினார். ரூபராஜ் கோல் கம்பத்தை நோக்கி உதைந்தபோது பந்து கம்பத்தைத் தாண்டிச் சென்றது. இதனால் டிஸ்கோ அணிக்கு கிடைத்த கோல் போடும் இலகுவான வாய்ப்பு வீணானது.

ஒலிம்பிக் அணி கோல் அடித்து முன்னிலையில் இருந்தாலும் டிஸ்கோ அணி வீரா்கள் ஆக்ரோஷமாக விளையாடினர்.

30ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஒலிம்பிக் வீரா் பயாஸ் கம்பம் நோக்கி அடிக்க, பந்தை எம்.எம்.ஜாவீத் ஹெடர் மூலம் கோல் பெற முயற்சித்தபோதும் பந்து கம்பத்தின் மேலால் சென்றது.

டிஸ்கோ அணியின் நட்சத்திர வீரா் ரஜீவன் ஒலிம்பிக் வீரா்கள் மூவரைத் தாண்டி பந்தை கோல் கம்பத்திற்குள் அடித்தபோது, பந்து கம்பத்திற்கு வெளியே செல்ல இலகுவாக கோல் போடும் வாய்ப்பு இல்லாமல் போனது. 

எவரெடி வெற்றிக் கிண்ண அரையிறுதியில் மோதவுள்ள நான்கு அணிகள்

அம்பாரை மாவட்ட கால்பந்து லீக்கின் அனுசரணையுடன் மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகம் நடாத்தும் “எவரெடி…

இதன் பின்னர் போட்டியின் முதலாவது பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இந்த நேரத்தில் ஒலிம்பிக் அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

முதல் பாதி: ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 1 – 0 டிஸ்கோ விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டத்தின் முதல் 10 நிமிடத்திற்குள் டிஸ்கோ வீரா்கள் தமது பங்கிற்கு பந்துகளை ஒலிம்பிக் கோல் கம்ப எல்லைப் பகுதிக்குள் கொண்டு வந்தபோதிலும் கோல் அடிப்பதில் அவ்வணி வீரா்கள் தவறியமை அவர்களுக்கு பெரும் பின்னடைவாகக் காணப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் ஆட்டத்தைக் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த ஒலிம்பிக் வீரா்கள் டிஸ்கோ கோல் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவினார்கள். போட்டியின் 81ஆவது நிமிடத்தில் ஜரீத் பரிமாறிய பந்தைப் பெற்றுக் கொண்ட  எம்.ஹனான் இடது பக்கத்திலிருந்து உதைத்தபோது கோல் காப்பாளரைத் தாண்டி பந்து கம்பத்திற்குள் சென்றது. இதன் மூலம் ஒலிம்பிக் கழகம் 2ஆவது கோலைப் பதிவுசெய்தது.

2 கோல்கள் தமக்கு எதிராக பெறப்பட்டாலும் டிஸ்கோ அணியின் ஆட்டத்தின் வேகம் குறையவில்லை. ஒலிம்பிக் அணியின் கோல் கம்பங்களை நோக்கி அடித்த பந்துகள் பல சந்தர்ப்பங்களில் கம்பத்திற்கு வெளியே சென்றது.

பெனால்டி எல்லைக்கு வெளியில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை வின்சன் கம்பம் நோக்கி அடித்தபோது, பந்து கம்பத்திற்கு சற்று மேலால் சென்றது. இதனால் டிஸ்கோ அணிக்கு கோலொன்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இறுதியில் இல்லாமல் போனது.

போட்டியின் பிரதான மத்தியஸ்தர் சீ.எம்.அஸ்கர் போட்டியை முடிவுக்குக் கொண்டுவர, 2 -0 என்ற கோல்கள் அடிப்படையில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று, முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

முழு நேரம்: ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 2 – 0 டிஸ்கோ விளையாட்டுக் கழகம்

போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணியின் பயிற்றுவிப்பாளர் யு.எஸ்.சபீல் கருத்துத் தெரிவிக்கும்போது, ”இவ்வெற்றி நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் சில கோல்கள் அடிக்கும் வாய்ப்பும் இருந்தது. அத்தோடு டிஸ்கோ அணியினரும் சிறப்பாக விளையாடினர். இறுதிப் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடி கிண்ணத்தைக் கைப்பற்றுவோம்” என்றார்.

தோல்வியடைந்த மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழக அணியின் பயிற்றுவிப்பாளர் வின்சன் கருத்துத் தெரிவிக்கும்போது, ”இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் எமது அணி சிறப்பாக விளையாடிபோதிலும் பின்னர் வீரா்களுக்கிடையில் சரியான பந்துப் பரிமாற்றம் காணப்படாமையே தோல்வியடைய நேரிட்டது. அத்துடன் சில வீரா்கள் காயத்திற்குள்ளாகியிருந்தமையும் எமக்கு பெரிய இழப்பாகும். அடுத்து வரும் போட்டிகளில் எமது தவறுகளை திருத்திக் கொண்டு, விளையாடி வெற்றி பெறுவோம்” என்றார்.

இப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக சீ.எம்.அஸ்கர் கடமையாற்றியதுடன் துணை நடுவர்களாக எஸ்.எம்.உபைதீன், ஏ.டபிள்யு.எம்.றிபாஸ் செயற்பட்டதுடன் நான்காவது நடுவராக எம்.எம்.ரஜீப் செயற்பட்டார்.

2ஆவது அரையிறுதி – மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் எதிர் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம்

இரவு 10.20 மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் அணியும், ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியும் மோதிக்கொண்டன.

போட்டி ஆரம்பமாகி 3ஆவது நிமிடத்தில் வை.எஸ்.எஸ்.சி வீரா் வை.டி.எம்.அனஸ் பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட எம்.எம்.தஸ்லிம் கோல்ட் மைன்ட் வீரா்கள் இருவரைத் தாண்டி பந்தை கோல் கம்பத்திற்குள் உதைத்தபோது கோல் காப்பாளரின் கையில் பட்டு பந்து கம்பத்திற்குள் சென்று கோலானது. இதனால் வை.எஸ்.எஸ்.சி அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றது. 

பலமிக்க விம்பில்டன் கழகத்திடம் போராடித் தோற்றது பேல்ஸ் கழகம்

புத்தளம் கால்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற “ட்ரெகன்ஸ் லீக் – 2017” போட்டிகளின் 29ஆவது…

கோல்ட் மைன்ட் அணியும் எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்துகளை கொண்டு சென்றபோதும் வை.எஸ்.எஸ்.சி அணியின் பின்கள வீரா்கள் அவற்றை தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டனர்.

இந்நிலையில் போட்டியின் 23ஆவது நிமிடத்தில் வை.எஸ்.எஸ்.சி அணி வீரா் எம்.எம்.முஸ்தாக் இடது பக்கத்திலிருந்து அடித்த பந்தை பெற்றுக் கொண்ட ஏ.சி.எம்.அஹ்சன் தூரத்திலிருந்து மிக வேகமாக உதைந்தபோது பந்து கோல் கம்பத்திற்குள் சென்றது. இதன் மூலம் இரண்டாவது கோலையும் வை.எஸ்.எஸ்.சி அணி பதிவுசெய்து, 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டு கோல்கள் தமக்கு எதிராக பெறப்பட்ட போதிலும் சளைக்காமல் விளையாடிய கோல்ட் மைன்ட் அணி வீரா்கள் எதிரணியின் பக்கம் பந்துகளை நகர்த்திய வண்ணம் இருந்தனர். கோல்ட் மைன்ட் அணியில், பின்களத்தில் விளையாடிய எம்.டி.அஸ்லம் முன்களத்திற்கு மாற்றப்பட்டு விளையாடினார்.

போட்டியின் 30ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்திய பகுதியிலிருந்து கோல்ட் மைன்ட்  வீரா் எம்.நுபைஸ் கொடுத்த பந்தைப் பெற்றுக் கொண்ட எம்.டி.அஸ்லம், இரண்டு வீரா்களைத் தாண்டி பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து வேகமாக உதைத்தபோது, பந்து கோல் காப்பாளரையும் தாண்டி கம்பத்திற்குள் சென்று கோலானது. இதன் மூலம் கோல்ட் மைன்ட் அணி போட்டியில் தமது முதலாவது கோலைப் பதிவுசெய்தது.

முதல் பாதி: வை.எஸ்.எஸ்.சி. விளையாட்டுக் கழகம் 2 – 1 கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக விளையாடப்பட்டு வந்த நிலையில் 60ஆவது நிமிடத்தில் வை.எஸ்.எஸ்.சி அணி தமது மூன்றாவது கோலையும் பதிவுசெய்தது. ஆதீல் வலது பக்கத்திலிருந்து வேகமாக உதைத்த பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வை.டி .எம்.அனஸ் வேகமாக பந்தைக் கொண்டு சென்று அடித்தபோது பந்து கம்பத்திற்குள் சென்று கோலாகியது.

இந்நிலையில் போட்டியின் 77ஆவது நிமிடத்தில் கோல்ட் மைன்ட் அணிக்காக முதலாவது கோலை அடித்த எம்.டி.அஸ்லம், வலது பக்கத்திலிருந்து வேகமாக கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தபோது பந்து கோல் காப்பாளரையும் ஏமாற்றி கம்பத்திற்குள் சென்றது. கோல்ட் மைன்ட் அணி இரண்டாவது கோலையும் பெற்றதனால் போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்தது.

போட்டி நிறைவடைய சில செக்கன்களே இருந்த நிலையில் கோல்ட் மைன்ட் அணிக்குக் கிடைத்த கோணர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி பந்தை எஸ்.ம்.நுபைஸ் அடித்தபோது எம்.ஜே.ஜிசான் அஹமட் ஹெடர் மூலம் கோல் அடித்தபோது மைதானம் ரசிகர்களின் கரகோசத்தினால் அதிர்ந்தது.

முழு நேரம்: வை.எஸ்.எஸ்.சி. விளையாட்டுக் கழகம் 3 – 3 கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம்

போட்டி 3-3 என்ற கோல்கள் அடிப்படையில் சமநிலையடைந்ததால் பெனால்டி மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. பெனால்டியில் வை.எஸ்.எஸ்.சி அணி 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

இப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக அலியார் பைஸர் கடமையாற்றியதுடன் துணை மத்தியஸ்தர்களாக எம்.எம்.ரஜீப், அலியார் ரசீட் ஆகியோர் கடமையாற்றினர்.

போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழக அணியின் பயிற்றுவிப்பாளர் எம்.தஸ்லீம் கருத்துத் தெரிவிக்கும்போது, ”இலகுவாக வெற்றி பெறுவோம் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனாலும் கோல்ட் மைன்ட் வீரா்கள் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக விளையாடினர். சில வாய்ப்புகளை எமது வீரா்கள் தவறவிட்டுள்ளனர். இறுதிப் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடி கிண்ணத்தைக் கைப்பற்றுவோம்” என்றார்.

தோல்வியடைந்த கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழக அணியின் பயிற்றுவிப்பாளர் பைசால் கருத்துத் தெரிவிக்கும்போது, ”இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் எமது அணி தடுமாறிய போதிலும் பின்னர் வீரா்களுக்கிடையில் சரியான பந்துப் பரிமாற்றம் போட்டியை சமநிலைப்படுத்த முடிந்தது. பெனால்டி அடிப்படையில் அண்மைக்காலமாக சில போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம். இவ்வாறான பிழைகளை எதிர்காலத்தில் திருத்திக் கொள்வோம்” என்று கூறினார்.

எவரெடி கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு மருதமுனை ஒலிம்பிக் மற்றும் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.