தேசிய கபடி சம்பியன்ஷிப்பில் நிந்தவூர் மதீனா அணி இரண்டாம் இடம்

161
Matheena SC

இலங்கை கபடி சம்மேளனம் 2023ஆம் ஆண்டுக்காக ஒழுங்கு செய்த தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்து விளையாடிய மதீனா விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருக்கின்றது.

>> கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப்புக்கு 3 நிந்தவூர் வீரர்கள் தெரிவு

தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடர் இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குருநாகல் பண்டுவஸ்நுவர ஹெட்டிபொல அரங்கில் நடைபெற்றிருந்தது.

இலங்கையின் 17 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்குபற்றியிருந்த இந்தப் போட்டித் தொடரில் ஆடவர் இறுதிப் போட்டிக்கு அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்த நிந்தவூரின் மதீனா விளையாட்டுக் கழக அணியும், கேகாலை விளையாட்டுக் கழக அணியும் தெரிவாகின.

இதில் இறுதிப் போட்டி வாய்ப்பினை அம்பாறை மாவட்டத்தின் மதீனா விளையாட்டுக்கழகம் தொடரின் அரையிறுதிப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணியினை வீழ்த்திப் பெற்றிருந்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயயமாகும்.

தொடர்ந்து இறுதிப் போட்டியில் மதீனா விளையாட்டுக் கழகம் பலத்த முயற்சிகளை மேற்கொண்ட போதும் இறுதிப் போட்டியில் கேகாலை அணியிடம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் துரதிஷ்டவமாக 69-70 என தோல்வியினைத் தழுவியது.

இதனால் அவ்வணி தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடரில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது. மதீனா அணியானது தேசிய கபடி அணித் தலைவர் அஸ்லம் சஜாவினால் வழிநடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

>> இலங்கை கபடி அணியின் தலைவராகும் அஸ்லம் சஜா

இந்நிலையில், இந்த போட்டி குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவிக்கும்போது, மதீனா விளையாட்டுக் கழக அணியின் பயிற்சியாளரான SM. இஸ்மத், அணிக்கு ஆதரவாக இருந்த அனைவரினையும் நினைவூட்டினார்.

மேலும், தமக்கு தொடரில் பங்கெடுக்க உதவிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்திருந்தார். இதில் குறிப்பாக தொடர் முழுவதும் தமக்கு ஆதரவு வழங்கிய அம்பாறை கபடி சம்மேளனத்திற்கும், அணிக்கான சீருடையினை (Jersey) வழங்கிய East West Solar நிறுவனத்திற்கும் விஷேட நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தொடரின் இறுதிப் போட்டியில் முன்னணி வீரர்கள் சிலருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக சம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் போனமை சிறிது ஏமாற்றம் எனவும் பதிவு செய்த அவர் எதிர்வரும் காலங்களில் தமது கபடி அணி சிறப்பாக செயற்படும் என நம்பிக்கை வெளியிட்டியிருந்தார்.

மதீனா விளையாட்டுக் கழக அணியானது தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடரில் இரண்டாம் இடம் பெற்றதன் மூலம், இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<