சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (14) வெளியிட்டுள்ள புதிய T20i தரவரிசையில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகிய இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இதன்படி, T20i பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹஸரங்க 6ஆவது இடத்தையும், T20i துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பானுக ராஜபக்ஷ 33ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 15ஆவது ஆசியக் கிண்ணத் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையானது குறித்த தொடரில் பிரகாசித்த வீரர்களை உள்ளடக்கிய புதிய T20i வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இம்முறை ஆசியக் கிண்ணத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 2ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்க, T20i பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி தற்போது 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். அதேபோல, T20i சகலதுறை வீரர்கள் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
- T20I தரவரிசையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்ட ஹர்திக் பாண்டியா
- இளம் படையுடன் ஆசியக்கிண்ணத்தை வென்றது இலங்கை!
- என்ன தவறு நடந்தது? தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட பாபர் அசாம்
இதனிடையே, இலங்கை அணியின் மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன தொடர்ந்து 8ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
அத்துடன், ஆசியக் கிண்ணத் தொடரில் துடுப்பாட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 4ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ஷ, T20i துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 34 இடங்கள் முன்னேறி தற்போது 34ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.
இம்முறை ஆசியக் கிண்ணத்தில் 191 ஓட்டங்களைக் குவித்த அவர், பாகிஸ்தான் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 71 ஓட்டங்களைக் குவித்து இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இந்த நிலையில், T20i துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரேயொரு இலங்கை வீரராக பெதும் நிஸ்ஸங்க காணப்படுகின்றார். இம்முறை ஆசியக் கிண்ணத்தில் 2 அரைச் சதங்களை விளாசி 173 ஓட்டங்களைக் குவித்த அவர், T20i தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ளார். முன்னதாக ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன் பெதும் நிஸ்ஸங்க 7ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, 3 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, 14 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதனிடையே, ஆசியக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் T20i துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்து பாகிஸ்தானின் பாபர் அசாம், இம்முறை போட்டித் தொடரில் பிரகாசித்தத் தவறினார். இதன் காரணமாக தற்போது அவர் தரவரிசையில் 3ஆவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.
எனினும், முதலிடத்தில் பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வானும், இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்காவின் எய்டன் மார்கரமும் காணப்படுகின்றனர்.
மேலும் T20i பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் முதலிடத்தைப் பிடிக்க, தென்னாபிரிக்காவின் தப்ரைஸ் ஷம்ஸி 2ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் ஆடில் ரஷீத் 3ஆவது இடத்திலும் காணப்பகின்றனர்.
இது தவிர, T20i சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்ட ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபியை பின்தள்ளி பங்களாதேஷின் சகிப் அல் ஹசன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<