தோற்பட்டை உபாதையால் PSL வாய்ப்பை இழக்கும் முன்னணி பாக். வீரர்

67

தோற்பட்டையில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹரிஸ் ரவூப் பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>நியூசிலாந்து குழாத்தில் இருந்து வெளியேறும் கொன்வேய்

இம்முறை PSL T20 தொடரில் லாஹூர் கலந்தர்ஸ் அணிக்காக ஆடி வந்த ஹரிஸ் ரவூப் கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற குழுநிலை மோதல் ஒன்றில் பிடியெடுப்பு ஒன்றை மேற்கொண்ட போது தோற்பட்டை உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். குறித்த உபாதை ஹரிஸ் ரவூபிற்கு தோற்பட்டை விலகியதன் (Shoulder Dislocation) காரணமாக ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் ஹரிஸ் ரவூபிற்கு ஏற்பட்டிருக்கும் உபாதை குணமடைய சுமார் ஆறு வாரங்கள் வரை தேவைப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையிலையே அவர் PSL தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார்.

அதேவேளை உபாதைக்கு முகம் கொடுத்துள்ள ஹரிஸ் ரவூப் பாகிஸ்தான் அணி மே மாதம் இடம்பெறும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னர் பூரண உடற் தகுதியினைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணியானது T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக நான்கு போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<