நுவனிதுவின் கன்னி T20 சதத்தால் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

Sri Lanka Emerging Team Tour of England 2022

131

இளம் வீரர் நுவனிது பெர்னாண்டோவின் கன்னி T20 சதம் மற்றும் நிபுன் ரன்சிகவின் அபார பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியால் க்ளொஸ்டெர்ஷெயர் கிரிக்கெட் அணிக்கு எதிராக நேற்று (29) நடைபெற்ற மூன்றாவதும், கடைசியுமான T20 போட்டியில் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி வெற்றியுடன் நிறைவுசெய்தது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, நான்கு நாட்கள் கொண்ட மூன்று போட்டிகளிலும், மூன்று T20 போட்டிகளிலும் விளையாடியது.

முன்னதாக நடைபெற்ற கென்ட், ஹெம்ஷெயர் மற்றும் சர்ரே கழகங்களுடன் நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதனையடுத்து சர்ரே கிரிக்கெட் அணி மற்றும் சமர்செட் கிரிக்கெட் அணிகளுடன் நடைபெற்ற முதலிரண்டு T20 போட்டிகளிலும் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி தோல்வியைத் தழுவியது.

எனவே, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் கடைசிப் போட்டியாக அமைந்த க்ளொஸ்டெர்ஷெயர் கிரிக்கெட் அணிக்கெதிரான 3ஆவது T20 போட்டியில் ஆறுதல் வெற்றியொன்றை எதிர்பார்த்த வண்ணம் இலங்கை அணி களமிறங்கியிருந்தது.

பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணியின் தலைவர் தனன்ஜய லக்ஷான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நுவனிது பெர்னாண்டோ 67 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 14 பௌண்டரிகள் உள்ளடங்களாக 126 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று தனது முதலாவது T20 சதத்தை பதிவு செய்தார்.

மறுபுறத்தில் நுவனிது பெர்னாண்டோவுடன் 2ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று இலங்கை அணிக்கு வலுச்சேர்த்த நிபுன் தனன்ஜய 22 பந்துகளில் 4 பௌண்டரிகள் உள்ளடங்களாக 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

க்ளொஸ்டெர்ஷெயர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் ஜோஷ் ஷோ மற்றும் லூக் சார்ள்ஸ்வெர்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 206 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய க்ளொஸ்டெர்ஷெயர் அணி, 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.

க்ளொஸ்டெர்ஷெயர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் பென் வெல்ஸ் 42 ஓட்டங்களையும், ஒலிவர் பிரைஸ் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணியின் பந்துவீச்சு சார்பில் நிபுன் ரன்சிக 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்க்க, அணித் தலைவர் தனன்ஜய லக்ஷான் 2 விக்கெட்டுகளுடன் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியிருந்தார்.

இதன்படி, 67 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி – 205/4 (20) – நுவனிது பெர்னாண்டோ 126*, நிபுன் தனன்ஜய 31, நிஷான் மதுஷ்க 20, ஜோஷ் ஷோ 1/23, லூக் சார்ள்ஸ்வெர்த் 1/32

க்ளொஸ்டெர்ஷெயர் அணி – 138 (16.3) – பென் வெல்ஸ் 42, ஒலிவர் பிரைஸ் 33, நிபுன் ரன்சிக 4/11, தனன்ஜய லக்ஷான் 2/29

முடிவு – இலங்கை அணி 67 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<