2015 உலகக் கிண்ண ஞாபகத்தை மீட்டெடுக்கும் சங்காவின் துடுப்பாட்ட சாதனை

753
Espncricinfo

குமார் சங்கக்கார, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறுக்கப்படாததும், மறக்கப்படாததுமான ஒரு பெயர். பெயர் என்பதையும் தாண்டி இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அழிக்கப்படாத ஒரு சாதனை நாயகனாக இன்றும் பதியப்பட்டிருக்கின்றார் சங்கக்கார. 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இவர் ஓய்வுபெற்ற போதும், மீண்டும் இலங்கை அணிக்கு திரும்ப மாட்டாரா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய ஒரு வீரர்.

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான இவரின் துடுப்பாட்ட யுத்திகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாகவும், இரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகவும் அமைந்தது என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. ஒவ்வொரு முறை இவர் களத்துக்கு வரும் போதும், அவரின், கவர் ட்ரைவ்’ஐ (Cover Drive) பார்ப்பதெற்கன தனியாக ஒரு கூட்டமே இருந்தது. இதில், இலங்கை இரசிகர்கள் மட்டுமல்ல சர்வதேச இரசிகர்களும் தான்.

இப்படி பாரிய இரசிகர்கள் பட்டாளம் உள்ள வீரர்கள் என்னதான் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், அவர்கள் ஓய்வு பெறும் காலம் நெருக்கடியான காலமாக இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். துடுப்பாட்ட வீரர்கள் என்றால் ஓட்டங்களை பெற தவறுவார்கள், பந்து வீச்சாளர்கள் என்றால் விக்கெட்டுகள் கிடைக்காது என பல்வேறு விமர்சனங்கள் எழும். ஆனால், எந்தவித தடுமாற்றமும் இன்றி, கடந்த காலத்தையும் விட ஓய்வு பெறும் காலம் நெருங்கும் தருணத்தில் ஓட்டங்களின் மூலம் சாதனை செய்து ஓய்வுபெற்ற ஒரு வீரர் என்றால் இலங்கை அணியை பொருத்தவரை அது குமார் சங்கக்காரதான்.

Espncricinfo

இவரது துடுப்பாட்டமும், அணிக்கான அர்ப்பணிப்பும் அளப்பரியது. 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத்துடன் தனது ஓய்வை அறிவித்த இவர், இன்று வரை முறியடிக்கப்படாத துடுப்பாட்ட சாதனையுடன் ஓய்வுபெற்றுள்ளார் என்பதை இலங்கை இரசிகர்களாகிய நாம் பெருமையாக கூறிக்கொள்ளலாம். ஒன்றல்ல, இரண்டல்ல, அதிகமான அழுத்தம் தரக்கூடிய உலகக் கிண்ண தொடரில் அடுத்தடுத்து நான்கு சதங்களை கடந்து குமார் சங்கக்கார படைத்த சாதனை, ஒருநாள் போட்டிகளில் இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.

இதற்கு பின்னர் கடந்த நான்கு வருடங்களில் இந்த சாதனையை இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இங்கிலாந்து அணியின் வீரர் ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் அஷாம் ஆகியோர் நெருங்கிய போதும், அவர்களால் 3 சதங்களை மாத்திரமே பெறமுடிந்தது. என்றோ ஒருநாள் இந்த சாதனை முறியடிக்கப்படலாம். ஆனால், ஓய்வு பெறும் காலத்தில், அதுவும் உலகக் கிண்ணத்தில் இவ்வாறான சாதனையை பதிவுசெய்தமை பாராட்டத்தக்கதே…

பந்து வீசுவதற்கான எண்ணமில்லை; அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான அஞ்செலோ மெதிவ்ஸ்…

ஆம். 2015ம் ஆண்டு உலகக் கிண்ண தொடரின் முதல் வெற்றியை மஹேல ஜயவர்தனவின் சதத்தின் உதவியுடன் இலங்கை பெற்றுக்கொண்டது. இதனையடுத்து குமார் சங்கக்காரவின் சாதனை சதக்குவிப்புகள் ஆரம்பாகின.

முதல் சதம் – இலங்கை எதிர் பங்களாதேஷ் – 26 பெப்ரவரி 2015

குமார் சங்கக்காரவின் வரலாற்று சாதனைக்கான முதல் புள்ளி இந்தப் போட்டியில் தான் வைக்கப்பட்டது. 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்ட இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றிருந்தது.

அணியின் ஒவ்வொரு வெற்றிகளும் அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்வாக்கு செலுத்தும் என்ற நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Espncricinfo

போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான் அதிரடியாக 161 ஓட்டங்களை விளாசியிருந்த நிலையில், குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் வெறும் 76 பந்துகளில் 105 ஓட்டங்களை பெற்று, குறித்த உலகக் கிண்ணத்தின் முதலாவது சதத்தை பதிவுசெய்தார். இந்த சதம் இவரது வேகமான சதமாகவும் மாறியது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி 332 ஓட்டங்களை குவிக்க, பங்களாதேஷ் அணி 240 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது.

இரண்டாவது சதம் – இலங்கை எதிர் இங்கிலாந்து – 01 மார்ச் 2015

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியால் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக இங்கிலாந்துக்கு எதிராக 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் குழு நிலைப்போட்டி அமைந்திருந்தது.

குறித்தப் போட்டியில் ஜோ ரூட்டின் சதத்துடன், இங்கிலாந்து அணி 309 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்தது. இந்த இலக்கானது குறித்த காலப்பகுதியில் மிக சவாலான இலக்காக இருந்த போதும், லஹிரு திரிமான்னே மற்றும் குமார் சங்கக்காரவின் சதங்களின் உதவியுடன் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

Espncricinfo

இந்தப் போட்டியில் லஹிரு திரிமான்னே 139 ஓட்டங்களை குவித்ததுடன், குமார் சங்கக்கார தனது வேகமான ஒருநாள் போட்டி சதத்தை கடந்து 117 ஓட்டங்களை குவித்தார். சங்கக்கார இந்தப் போட்டியில் 70 பந்துகளில் சதம் கடந்து முதல் போட்டியில் இருந்த சாதனையை தகர்த்து வேகமான சதத்தை அடுத்த போட்டியிலேயே முறியடித்தார்.

மூன்றாவது சதம் – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா – 08 மார்ச் 2015

குழுநிலை போட்டிகளில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்திவந்த அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்தது.

கிளேன் மெக்ஸ்வேல் 53 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்ற நிலையில், அவுஸ்திரேலிய அணி, இலங்கை அணிக்கு 377 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்தது.

Espncricinfo

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியும், தங்களுடைய துடுப்பாட்டத்தில் சிறப்பித்திருந்த போதும், இலங்கை அணியால் 312 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. எனினும், இந்தப் போட்டியில் சதம் கடந்த குமார் சங்கக்கார தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டி சதங்களை விளாசிய 7வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.  இந்தப் போட்டியில் இவர், 107 பந்துகளில் 104 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கும் நான்கு இலங்கை வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள மாகாணங்களுக்கு இடையிலான…

நான்காவது சதம் – இலங்கை எதிர் ஸ்கொட்லாந்து – 11 மார்ச் 2015

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான குழுநிலைப் போட்டியில் மீண்டும் சதம் விளாசிய குமார் சங்கக்கார ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசிய முதலாவது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 363 ஓட்டங்களை குவித்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 215 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குமார் சங்கக்கார 95 பந்துகளில் 124 ஓட்டங்களை குவித்திருந்தார்.

Espncricinfo

இவ்வாறு, தான் ஓய்வு பெறும் காலப்பகுதியில் அடுத்தடுத்து சதங்களை குவித்த குமார் சங்கக்கார சாதனையை பதிவுசெய்த போதும், 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியால் காலிறுதிக்கு மாத்திரமே முன்னேற முடிந்தது. தொடர் முழுவதும் ஓட்டங்களை அள்ளிக்குவித்த இலங்கை அணியால், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் வெறும் 133 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட, குமார் சங்கக்கார மாத்திரம் அதிகபட்சமாக 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அதிகமாக பேசப்பட்ட குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் இறுதி சர்வதேச போட்டியாக இந்தப் போட்டி அமைந்திருந்ததுடன், இலங்கை இரசிகர்களின் கண்ணீரின் மூலம் இருவரதும் பிரியாவிடையும் நடைபெற்றது. வெற்றியோ? தோல்வியோ, இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள் இவர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இனி இவர்கள் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், இவர்களால் இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் வளர வேண்டும் என்பதே எம்மில் பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது…

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<