ஆஸி. வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசிய சுராஜ் ரன்தீவ்

Suraj Randiv Helps Aussie Batsmen in Nets Ahead of Boxing Day Test

2146

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட போட்டிக்காக அந்த அணி வீரர்கள் தற்போது மேற்கொண்டு வரும் வலைப்பயிற்சியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சுராஜ் ரன்தீவ் பந்து வீசி வருகிறார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 4 போட்டிகளை கொண்ட போர்டர்கவாஸ்கர் கோப்பையின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி கடந்த 17ஆம் திகதி அடிலெய்டில் நடைபெற்றதுடன், இந்திய அணி 36 ஓட்டங்களினால் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது

புதிய வகை கொவிட் வைரஸ் தொற்றினால் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சந்தேகம்

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே, இந்தியாஅவுஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் நாளை மறுநாள் (26ஆம் திகதி) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்தியாவுடனான முதல் டெஸ்டில் அஸ்வினின் பந்துவீச்சுக்கு முகங்கொடுப்பதில் ஆஸி. வீரர்கள் சற்று தடுமாற்றத்தை சந்தித்திருந்தனர். இதில் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினையும் அஸ்வின் கைப்பற்றினார்.

Video: “தென்னாபிரிக்க அணியை வீழ்த்துவது இலகுவான விடயமல்ல” – திமுத் கருணாரத்ன!

எனவே, இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் பந்துவீச்சை சிறந்த முறையில் எதிர்கொள்வதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகின்ற இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான சுராஜ் ரன்தீவின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சேன், ட்ரெவிஸ் ஹெட் உள்ளிட்ட வீரர்களுக்கு சுராஜ் ரன்தீவ் வலைப்பயிற்சியின் போது பந்துவீசியுள்ளதுடன், அவர் பந்துவீசுகின்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது

35 வயதான சுராஜ் ரன்தீவ் இலங்கை அணிக்காக இறுதியாக 2012இல் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்ததுடன், 2016இல் இங்கிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் போட்டியிலும், 2011இல் இங்கிலாந்து அணிக்கெதிராக T20 போட்டியிலும் இறுதியாக விளையாடியிருந்தார்.

சுராஜ் ரன்தீவ் 12 டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 7 T20 போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<