தெற்காசிய விளையாட்டு விழா – கால்பந்து அட்டவணை வெளியீடு

84

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் ஆடவர், மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்கவுள்ள கால்பந்து போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Vantage FA கிண்ண 32 அணிகள் சுற்றுப் போட்டி விபரம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில், எபோனி ஹோலிடிங்ஸ் தனியார்…

வெளியிடப்பட்டிருக்கும் போட்டி அட்டவணைகளுக்கு அமைவாக இலங்கையின் ஆடவர், மகளிர் கால்பந்து அணிகள் தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் ஏனைய நாடுகளின் ஆடவர், மகளிர் கால்பந்து அணிகளுடன் ஒரு தடவை மோதவிருக்கின்றன. 

பின்னர் குறிப்பிட்ட பிரிவுகளுக்கான புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களில் வரும் ஆடவர், மகளிர் கால்பந்து அணிகள் தங்கப் பதக்கத்திற்கான இறுதி மோதலில் களமிறங்கவிருக்கின்றன. 

ஆடவர் கால்பந்து போட்டிகள் 

தெற்காசிய விளையாட்டு விழாவில் இருந்து இந்திய ஆடவர் கால்பந்து அணி விலகியதனை அடுத்து, ஆடவர் கால்பந்து போட்டிகளுக்கான புதிய போட்டி அட்டவணை ஒன்றினை தெற்காசிய விளையாட்டு விழாவின் ஏற்பாட்டாளர்கள் உருவாக்கியுள்ளனர்.  

அந்தவகையில் முன்னதாக தயார் செய்யப்பட்ட போட்டி அட்டவணையில் குழு B அணிகளில் ஒன்றாக இந்தியா, மாலை தீவு ஆகிய நாடுகளுடன் இருந்த இலங்கை ஆடவர் கால்பந்து அணி தற்போது இந்தியா விலகியிருக்கும் காரணத்தினால் தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கெடுக்கும் ஏனைய நான்கு ஆடவர் கால்பந்து அணிகளுடனும் லீக் போட்டிகளில் மோதவிருக்கின்றது. 

புதிய போட்டி அட்டவணைக்கு அமைவாக இலங்கை ஆடவர் கால்பந்து அணியின் முதல் போட்டி மாலை தீவு அணியுடன் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றது. இலங்கை ஆடவர் கால்பந்து அணி விளையாடும் போட்டிகளில், நேபாளத்திற்கு எதிரான போட்டி தவிர அனைத்து லீக் போட்டிகளும் தசராத் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன. அதேநேரம், நேபாளத்திற்கு எதிரான போட்டி போக்காரா மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது. 

போட்டி அட்டவணை 

மாலை தீவு எதிர் இலங்கை

டிசம்பர் 2, தசராத் மைதானம் (நேரம் மாலை 5 மணி)

நேபாளம் எதிர் இலங்கை 

டிசம்பர் 4, போக்காரா மைதானம் (நேரம் மாலை 5 மணி)

இலங்கை எதிர் பங்களாதேஷ்

டிசம்பர் 5, தசராத் மைதானம் (நேரம் மாலை 5 மணி)

இலங்கை எதிர் பூட்டான்

டிசம்பர் 7, தசராத் மைதானம் (நேரம் மாலை 5 மணி)

இலங்கை ஆடவர் கால்பந்து அணி தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ள குறைந்தது தாம் விளையாடும் போட்டிகளில் ஒரு சமநிலை முடிவுடன் இரண்டு வெற்றிகளை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.   

மகளிர் கால்பந்து போட்டிகள் 

நான்கு நாடுகளின் மகளிர் அணிகள் தெற்காசிய விளையாட்டு விழாவின் மகளிர் பிரிவு கால்பந்து போட்டிகளில் பங்கெடுக்கின்றன. 

அதன்படி இந்தியா, இலங்கை, நேபாளம் மற்றும் மாலை தீவு ஆகியவற்றின் மகளிர் கால்பந்து அணிகள் தங்களுக்கிடையே லீக் மோதல்களில் ஈடுபட்டு தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.

அதேவேளை, மகளிர் கால்பந்து அணிகள் பங்கெடுக்கும் அனைத்துப் போட்டிகளும் நேபாளத்தின் போக்காரா மைதானத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டி அட்டவணை 

நேபாளம் எதிர் இலங்கை 

டிசம்பர் 3, போக்காரா மைதானம் (நேரம் மதியம் 1 மணி)

இந்தியா எதிர் இலங்கை 

டிசம்பர் 5, போக்காரா மைதானம் (நேரம் மதியம் 1 மணி) 

மாலை தீவு எதிர் இலங்கை 

டிசம்பர் 7, போக்காரா மைதானம் (நேரம் மதியம் 1 மணி)

>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<