“கிராமிய மட்டத்தில் கால்பந்தை அபிவிருத்தி செய்வதே முதல் இலக்கு” – ஜஸ்வர் உமர்

Football federation of Sri Lanka

169

கிராமிய மட்டத்தில் கால்பந்தை அபிவிருத்தி செய்யவதற்கான திட்டங்களை அமுல்படுத்த இருப்பதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FSL) புதிய தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான பொதுத் தேர்தலில், 6 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜஸ்வர் உமர், புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஒரு வருடத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பெனால்டியின் வென்ற ஸ்பெயின், பெல்ஜியத்தை வீழ்த்திய இத்தாலி அரையிறுதியில்

இந்தநிலையில், நேற்றைய தினம் (02) பதவியேற்ற ஜஸ்வர் உமர் தனது பதவியேற்பின் பின்னர் உரையாற்றுகையில், சர்வதேச அளவில் கிண்ணங்களை வெற்றிக்கொள்வதை விடவும், கிராமப்பகுதிகளில் கால்பந்தை அபிவிருத்தி செய்வதே எமது முதல் இலக்கு என கருத்து வெளியிட்டுள்ளார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், 2022ஆம் ஆண்டு கட்டாரில் உலகக் கிண்ணம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் நடைபெறும். குறித்த உலகக் கிண்ணத்தில் அணிகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரிக்கப்படவுள்ளதுடன், ஆசிய வலய அணிகளுக்கு தகுதி பெறுவதற்கு வழங்கப்படும் பங்கீட்டு முறையில் 4.5 இலிருந்து 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிய நாடுகளில் போட்டித்தன்மையும், முதலீடுகளும் அதிகரிக்கும்” என்றார்.

எனினும், தற்போதைய நிலையில் கிண்ணங்களை நோக்கிய பயணத்தை நிறுத்திவிட்டு, நாட்டின் கிராமப் புறங்களில் கால்பந்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஜஸ்வர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், நாம் கிராமப் புறங்களில் கால்பந்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். இல்லையெனில், எத்தனை கிண்ணங்களை வென்றும் அதில் பலன் இல்லை. அனைவரும் கால்பந்து விளையாட வேண்டும். இதன்மூலமே வளர்ச்சியை அடையமுடியும். எனவே, அதற்கான திட்டங்களை உருவாக்கவுள்ளேன். இந்த திட்டங்களை நான்கு வருடங்களுக்கு செயற்படுத்த வேண்டும்என்றார்.

அத்துடன், கால்பந்தாட்டத்தை கிராமப்புற கால்பந்தாட்டம், தேசிய கால்பந்தாட்டம் மற்றும் சர்வதேச கால்பந்தாட்டம் என மூன்றாக வகுப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் கிராமப்புறத்தில் கால்பந்தை ஊக்குவிக்க முடியும். அதேநேரம், சுப்பர் லீக் போன்ற தொடர்களை நடத்தி அதன்மூலம் தேசிய அணிக்கு வீரர்களை உருவாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, லீக் தொடர்களுக்கான யாப்பு முறைகள் வெவ்வேறு விதமாக உள்ளதுடன், அதனை ஒன்றாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேநேரம், கடந்த காலங்களில் விடப்பட்ட இலங்கையின் பல கால்பந்து லீக் தொடர்களை மீண்டும் நடத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அதேநேரம், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 28 இலிருந்து 15 ஆக குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒருவருட காலப்பகுதிக்குள் இயன்றளவில் மகளிருக்கான கால்பந்தாட்டத்தை வளர்ச்சியடைய செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜஸ்வர் உமர் தன்னுடைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க…