மெண்டிஸ், டிக்வெல்ல, குணதிலக்கவுக்கு ஓராண்டு தடை ; 1 கோடி அபராதம்

Sri Lanka Cricket

721

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒரு வருட தடையும், உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆறுமாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வைத்து உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டப்பட்ட தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு போட்டித்தடை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு நேற்றைய தினம் (29) பரிந்துரைத்திருந்தது.

இலங்கை – தென்னாபிரிக்க தொடரின் போட்டி அட்டவணை வெளியானது

அதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையானது, தேசிய அணி மற்றும் வீரர்களின் எதிர்காலம் தொடர்பில் கருத்திற்கொண்டு, இந்த வீரர்கள் மூவருக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாட 6 மாத தடை உட்பட, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு வருட தடையும், இலங்கை ரூபாயில் 10 மில்லியன் (ஒரு கோடி) அபராதமும் விதித்துள்ளது.

அதுமாத்திரமின்றி, மேற்குறித்த மூவரும்  எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறி செயற்பட்டால், மேலும் ஒருவருடத்துக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி, வைத்தியரிடம் கட்டாய வைத்திய ஆலோசனைகளை பெறவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அணியானது, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடியது. இதன்போது, வீரர்கள் அனைவரும் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருந்ததுடன் தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறையை மீறியிருந்தனர்.

குறித்த இந்த வீரர்கள் மூவரும் உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறையை மீறி டர்ஹாமின் வீதியோரத்தில் இருந்தமையை நபரொருவர் வீடியோ பதிவுசெய்து சமுக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நிலையில், இவர்கள் மூவரும் உடனடியாக நாட்டுக்கு அழைக்கப்பட்டதுடன், விசாரணைகள் நடைபெறும் வரையில் சகலவித கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்றைய தினம் (29), ஓய்வுபெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நிமால் திசாநாயக்க தலைமையில் 5 பேர்கொண்ட விசாரணைக்குழு, மூவரிடமும் விசாரணையை மேற்கொண்டது. விசாரணையின் முடிவின் அடிப்படையில், தண்டனை தொடர்பான முடிவுகளை இலங்கை கிரிக்கெட் சபையிடம் கையளித்திருந்தது.

இந்த தடையின் காரணமாக, இலங்கை அணி இந்த வருடம் விளையாடவுள்ள ஐசிசி T20I உலகக் கிண்ணத்தில், நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் விளையாடுவதற்கான தகுதியை இழந்துள்ளனர். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<