இத்தாலி புதிய சாதனை; கோல் வித்தியாசத்தில் அடுத்த சுற்றுக்கு சென்ற வேல்ஸ்

UEFA EURO 2020

80
 

யூரோ 2020 கால்பந்து தொடரில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற A குழுவுக்கான இறுதி 2 லீக் போட்டிகளில் வேல்ஸை வீழ்த்திய இத்தாலி, சர்வதேச கால்பந்து அரங்கில் புதிய சாதனை படைத்ததுடன், சுவிட்சர்லாந்து அணி, துருக்கியை வீழ்த்தியுள்ளது. 

எனினும், சுவிட்சர்லாந்து அணியுடன் சம புள்ளிகளைப் பெற்ற வேல்ஸ் அணி கோல் வித்தியாசத்தில் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. 

இத்தாலி எதிர் வேல்ஸ் 

இத்தாலியின் ஒலிம்பியா அரங்கில் இடம்பெற்ற A குழுவுக்கான இந்தப் போட்டியில் விளையாடிய இத்தாலி ஏற்கனவே தமது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியிருந்தது. எனினும், வேல்ஸ் கட்டாய வெற்றி அல்லது சமநிலையடைந்தால் எந்த தடையும் இன்றி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் நிலையில் அல்லது தோல்வியடைந்தால் சுவீட்சர்லாந்தின் போட்டி முடிவில் தங்கியிருக்க வேண்டிய நிலையில் இருந்தது. 

ரொனால்டோவுக்கு இரட்டை கோல்; ஜெர்மனியை வீழ்த்திய பிரான்ஸ்

இந்தப் போட்டி ஆரம்பமாகி 39ஆவது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு எதிரணியின் மத்திய களத்தில் இருந்து கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது உள்ளனுப்பிய  பந்தின்மூலம் பெஸ்ஸினா போட்டியின் முதல் கோலைப் பெற்றார். இந்த கோலுடன் முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தது.

பின்னர் இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்களில் வேல்ஸ் பின்கள வீரர் எதான் அம்பாபு நடுவரினால் நேரடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன்போது VAR மூலம் குறித்த தீர்வு தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்பட்ட போதும் அதில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. 

அதன் பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய வேல்ஸ் அணிக்கு எதிராக இத்தாலி பல கோலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியும் அவை சிறந்த முறையில் நிறைவு பெறவில்லை. 

மறுமுனையில் வேல்ஸ் அணியின் தலைவர் கிரேத் பேலுக்கு கிடைத்த சிறந்த ஒரு வாய்ப்பை அவர் கம்பங்களுக்கு மேலால் வெளியே அடித்து வீணாக்கினார்.  

எனவே, போட்டி நிறைவில் 1-0 என வெற்றி பெற்ற இத்தாலி, தாம் இறுதியாக ஆடிய 30 போட்டிகளில் தோல்வியைத் தழுவாத சாதனையை படைத்தது. அதேபோன்று, தமது இறுதி 11 போட்டிகளிலும் இத்தாலி எதிரணிக்கு எந்தவொரு கோலையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முழு நேரம்: இத்தாலி 1 – 0 வேல்ஸ்

கோல் பெற்றவர்கள் 

இத்தாலி – M. பெஸ்ஸினா 39

சுவிட்சர்லாந்து எதிர் துருக்கி 

யூரோ 2020 லீக் சுற்றில் குழு A இற்கான கடைசி ஆட்டமாக இடம்பெற்ற இந்தப் போட்டி அசர்பிஜானில் உள்ள பாகு அரங்கில் இடம்பெற்றது. 

போட்டியின் முதல் பாதி முடிவின்போது 2-0 என முன்னிலை பெற்றிருந்த சுவிட்சர்லாந்து அணி இரண்டாம் பாதியில் மற்றொரு கோலைப் பெற, துருக்கி ஒரு கோலினை மட்டுமே பெற்றது. 

இந்தப் போட்டி முடிவினால் சுவிட்சர்லாந்து அணியும், வேல்ஸ் அணியைப் போன்று தாம் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றது. எனினும், இரண்டு அணிகளுக்கும் இடையிலான கோல் வித்தியாசத்தில் வேல்ஸ் அணி முன்னிலை பெற்று, குழு A இல் இருந்து இரண்டாவது அணியாக காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கு தெரிவானது. 

முழு நேரம்: சுவிட்சர்லாந்து 3 – 1 துருக்கி 

கோல் பெற்றவர்கள்   

சுவிட்சர்லாந்து – Haris Seferović  6’, Xherdan Shaqiri 29’ & 68’

துருக்கி –  İrfan Kahveci  62’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<