இலங்கை அணி சிறந்த நுட்பத்துடன் ஆடியது – யுங் ஜொங் சு

65

தமக்கு எதிராக இலங்கை கால்பந்து அணி வீரர்கள் சிறந்த நுட்பத்துடன் விளையாடியதனால், எமது திட்டம் உரிய முறையில் நிறைவேறவில்லை என வட கொரிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் யுங் ஜொங் சு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற படிப்பினைகளை வைத்து அணியில் மேற்கொண்ட மாற்றங்கள் வட கொரிய அணியுடனான போட்டியில் வெற்றி தந்ததாக இலங்கை கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி குறிப்பிட்டார்.

இலங்கையுடன் போராடி வென்றது பலம் மிக்க வட கொரியா

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிகாண் சுற்றில்…

உலகக் கிண்ண தகுதிகாண் மோதலின் இரண்டாம் சுற்றில், தமது சொந்த மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை வீரர்கள், நேற்று (10) வட கொரியாவுக்கு கடும் சவால் கொடுத்த பின்னர் 1-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி கண்டனர். எனினும், தமது முன்னைய போட்டியில் துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிராக விட்ட பல பிழைகளை சரிசெய்து, இலங்கை வீரர்கள் சிறந்த ஒரு முன்னேற்றத்தை காண்பித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றைய போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தமது அணியின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த பக்கீர் அலி, ”இன்றைய போட்டி எமக்கு கடுமையான ஒரு ஆட்டமாக இருந்தது. எமது முன்னைய போட்டியில் சில தவறுகள் விடப்பட்டிருந்தன. எனினும், இன்றைய போட்டியில் முதல் பதினொருவரில் மாற்றங்களை ஏற்படுத்தி எமது திட்டத்தை சிறந்த முறையில் நிறைவேற்றினோம். அந்த திட்டங்கள் வெற்றியளித்தன. எனவே, வீரர்களிடம் நாளுக்கு நாள் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றதை காணலாம்” என்றார்.

வட கொரிய அணியுடன் இலங்கை வீரர்கள் முதல் பாதியில் கோலுக்கான முயற்சிகள் சிலவற்றை ஏற்படுத்தினர். எனினும், சிறந்த நிறைவுகள் இல்லாமையால் அந்த வாய்ப்புக்கள் அனைத்தும் வீணாகின. அது போன்றே, எதிரணயின் கோல் வாய்ப்புக்களையும் இலங்கை பின்கள வீரர்களும் கோல் காப்பாளர் சுஜான் பெரேராவும் சிறப்பாகத் தடுத்தனர். எனினும், வட கொரிய வீரர் ஜாங் சுக் சோல் ஹெடர் மூலம் பெற்ற கோலை எந்த வகையிலும் தடுக்க முடியாமல் இருந்தது.

”ஏன் இலங்கை அணி அதிகமாக பின்களத்தில் தடுப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியது?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பக்கீர் அலி, ”இல்லை, நாம் தடுப்பாட்டத்தை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை. போட்டி ஆரம்பித்த முதல் 20 நிமிடங்களும், இரண்டாம் பாதியின் முதல் 20 நிமிடங்களும் எமக்கு மிகவும் ஆபத்தானது. எனவே, நாம் அந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என எமது வீரர்களுக்கு கூறியிருந்தேன். அது போன்றே அவர்கள் செய்தனர். பின்னர் நாம் தடுப்பு ஆட்டத்தை மாத்திரம் மேற்கொள்ளாமல், கோலுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டோம்.

எனினும், எமது வீரர்கள் அதிகமாக தடுப்பு ஆட்டம் மேற்கொள்வது குறித்து மேலும் கவனம் செலுத்தி, ஆராய்ந்து, அதில் உள்ள பிழைகளைத் திருத்தி, எதிர் காலத்தில் மேலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்” என்றார்.

Photos : Sri Lanka v North Korea | 2022 FIFA World Cup Qualifiers

ThePapare.com | Viraj Kothalawala | 10/09/2019 | Editing and re-using images without permission of…

இலங்கை தேசிய அணிக்கான பயிற்சிகள் குறித்து தெளிவுபடுத்தும்போது, நாம் ஒரு அட்டவணை வைத்து, அதன்படி வீரர்களுக்கு வெவ்வேறான முறையிலான பல பயிற்சித் திட்டங்களை வழங்குவதாக பக்கீர் அலி தெரிவித்தார்.

மேலும், இந்த போட்டியிலும், எமக்கு கோல் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் நாம் அதனை நழுவவிட்டதாக பக்கீர் அலி மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பின்போது, கருத்து தெரிவித்த வட கொரிய அணியின் பயிற்றுவிப்பாளர் யுங் ஜொங் சு, ”இலங்கை அணி இன்று தடுப்பாட்டத்தை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்தியது. இதுவே, நாம் அதிக கோல் வாய்ப்புக்களை உருவாக்கியபோதும், எம்மால் ஒன்றுக்கு மேற்பட்ட கோல்களைப் பெறமுடியாமல் போனமைக்கு காரணமாகும். இலங்கை வீரர்களது நுட்பம் மிகவும் அற்புதமாக இருந்தது. நாம் எமது அடுத்த போட்டிகளுக்கு இதனை விட சிறந்த முறையில் தயாராக வேண்டி உள்ளது” என்றார்.

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க